தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் விஷால் அவரது நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா இருவருக்குமான பிரச்னை தான்.
‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்!
சென்னை, சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (VFF) நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என புகார் எழுந்தது. பிடிவாரண்ட் வரை சென்ற வழக்கில் விஷால் தரப்பில் 80 சதவீதம் வருமான வரித்துறைக்கு பணத்தைக் கட்டினர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றதில் நிலுவையில் உள்ள நிலையில், விஷால் பில்ம் பேக்டரி நிறுவன மேலாளர் ஹரி கிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறியிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ் தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார். சோதனையில், கணக்காளர் ரம்யா டி.டி.எஸ் தொகையிலிருந்து பணத்தை கையாடல் செய்து தனது கணவர் தியாகராஜனின் வங்கி கணக்கிற்கும், தனது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் அனுப்பியது தெரியவந்ததாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
பணமோசடி செய்த கணக்காளர் ரம்யாவை கைது செய்து 45 லட்சம் ரூபாயை பெற்றுத் தருமாறு புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விஷால் தரப்பின் புகாரை ரம்யா மறுத்தார்.
அதோடு இந்த குற்றச்சாட்டு குறித்த தனது விளக்கத்தை ஊடகத்திலும் தெரிவித்தார். விஷாலின் அலுவலகத்தில் தொடர்ந்து நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கு நான் தான் சாட்சி எனவும் அவர் ரம்யா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”திரைப்படங்களில் பார்ப்பது போல அவர் ஹீரோ இல்லை பெரிய வில்லன்” என்றார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள பண கையாடல் புகார் பற்றி பேசிய ரம்யா, தான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அதோடு விஷால் தன்னை மிரட்டிவிட்டு காரை எடுத்து சென்று விட்டதாகவும் ரம்யா குற்றம் சாட்டினார்.
ரம்யாவை தொடர்ந்து ஊடகத்திடம் பேசிய அவரது சகோதரர் ராஜேஷ், விஷால் அலுவலகத்தின் வெளியே தான் மிரட்ட பட்டதாகவும் ரம்யாவுக்கு எதிராக மாறும்படி விஷால் தரப்பு மிரட்டியதாகவும் தெரிவித்தார். அதை வீடியோ வடிவிலும் எழுத்து வடிவிலும் அவர்கள் பதிவு செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டார். அதோடு போலீசில் புகார் அளித்தால் ஸ்டேஷனிலேயே கொன்று விடுவோம் என தான் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேனேஜர் ஹரி, ரம்யா தவறு செய்ததற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் அவர் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தாலும் எந்த பிரச்சனையும் தங்களுக்கு இல்லை. ரம்யா தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதை சரி செய்து கொள்ள போலீஸ் ஸ்டேஷனில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் கூறினார். இப்படி விஷால் தரப்பும், ரம்யா தரப்பும் மாறி மாறி தங்கள் தரப்பு நியாயத்தை முன் வைக்க, இதில் எது தான் உண்மை என குழம்பிப் போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”