வருமான வரி வழக்கில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கவுதம் மேனன் தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்னைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் கலக்கிக்கொண்டிருக்கும் கவுதம் மேனன் சமீபத்தில் வெளியான விடுதலை, பத்து தல உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்,
இதனிடையே கௌதம் மேனன் 2011 ஆம் ஆண்டு முதல் ‘ஃபோட்டான் கதாஸ்’ திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநராக இருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த நிறுவனம் கடந்த 2013-14ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததால், ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் மீது வருமான வரித்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கவுதம் மேனனை குற்றவாளியாக சேர்த்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கௌதம் மேனன் தனக்கு எதிரான வருமான வரி வழக்கில் தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி சந்திரசேகரன் விசாரித்தார்.
இதையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை மேனன் நாடினார். இந்த மனுவின் அடிப்படையில், திரைப்பட இயக்குநருக்கு விலக்கு அளித்து நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil