Jayalalithaa Death Anniversary : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. அவர் காலமானதும், பல திரைப்பட இயக்குநர்களும், எழுத்தாளர்களும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி படம் இயக்குவதாக தெரிவித்திருந்தனர். இப்படி நிறைய அறிவிப்புகள் வந்த போதிலும், மூன்று திரைப்பட இயக்குநர்களால் மட்டுமே இதன் வேலையைத் தொடங்க முடிந்தது.
அதன் படி, ‘தலைவி’ என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராகவும் நடிக்கிறார்கள். இதனை விஷ்ணு வர்தன் இந்தூரி, ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோர் விப்ரி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் கர்மா மீடியா & என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் தயாரிக்கிறார்கள். நவம்பர் 11, 2019 அன்று தொடங்கிய ‘தலைவி’ திரைப்படம் ஜூன் 26, 2020 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் சமீபத்தில் வெளியாகி, பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கப்படும் தலைவி படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ், சஞ்சித் பால்ஹாரா இசையமைக்கிறார்கள். அங்கித் பால்ஹாரா பின்னணி இசையைக் கவனிக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார், படத்தின் வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அனுமதி பெறவில்லை என்று கூறி, ’தலைவி’ தயாரிப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, தீபாவின் சகோதரர் தீபக் ஜெயக்குமாரிடம் தான் என்.ஓ.சி வாங்கி விட்டதாக ஏ.எல்.விஜய் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இயக்குனர் மிஷ்கின் முன்னாள் உதவியாளரான பிரியதர்ஷினி தனது முதல் படமாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குவதாக அறிவித்துள்ளார். ’தி அயர்ன் லேடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு, நடிகை வரலட்சுமியை டேக் செய்திருந்தார். அப்போது, ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறார் என செய்திகள் வெளியாகின. பின்னர் ஜெயலலிதாவாக நடிகை நித்யா மேனன் நடிப்பதாகவும், ஜெயலலிதாவின் நீண்டகால தோழியான, சசிகலாவாக வரலக்ஷ்மி நடிப்பார் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
படத்தின் தயாரிப்பாளர்களான பேப்பர்டேல் புரொடக்ஷன்ஸ், சுதந்திர தினத்திற்குப் பிறகு 2018 ஆகஸ்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். பின்னர் 2020 பிப்ரவரியில் தான், பிரியதர்ஷினி இதனை உறுதி செய்தார். த அயர்ன் லேடி படம் 2020 பிப்ரவரியில் வெளியாகும் என தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்தபடியாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி புகழ் பிரசாத் முருகேசன் ஆகியோர் MX பிளேயருக்காக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சிரீஸ்களாக இயக்குகிறார்கள். ’குயின்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த சிரீஸில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சிறுவயது ஜெயலலிதாவாக அனிகா சுரேந்திரனும், டீன் ஏஜ் கதாபாத்திரத்தில் அஞ்சனா ஜெயபிரகாஷும் நடிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் வேடத்தில் இந்திரஜித் சுகுமாரன் நடிக்க, சிறிய பாத்திரத்தில் கெளதம் மேனன் நடிக்கிறார். தர்புகா சிவா இந்தத் தொடருக்கு இசையமைக்க, மீதமுள்ள தொழில்நுட்பக் குழுவினர் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மூன்று சீசன்களைக் கொண்ட குயின் வெப் சிரீஸில், முதல் சீசன் பதினொரு அத்தியாயங்களைக் கொண்டிருக்கும். ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம் தொடங்கி, அவர் அரசியலில் நுழைவதில் இது முடிவடையும் என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா எதிர்கொண்ட அனைத்து போராட்டங்களையும், அவர் விருப்பமில்லாமல் திரையுலகில் நுழைந்ததையும் பற்றி இது பேசும். "எந்தவொரு அரசியல்வாதியையும் நேரடியாகக் குறிப்பிடாமல் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களும் கவனமாக மாற்றப்பட்டுள்ளன," என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.