Advertisment

ரஜினிகாந்த் படம் வெளியாவதில் சிக்கல்? ’ஜெயிலர்’ டைட்டிலுக்கு முதல் உரிமை கோரும் மலையாள இயக்குனர்

ஜெயிலர் vs ஜெயிலர்: ரஜினிகாந்த் படத்தின் தலைப்பை முதலில் பதிவு செய்ததாக மலையாள இயக்குனர் கூறியதால் சர்ச்சை

author-image
WebDesk
New Update
Jailer

இரண்டு ஜெயிலர் படங்களும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. (படங்கள்: பேஸ்புக்)

Anandu Suresh

Advertisment

ஒப்பீட்டளவில் அமைதியான ஜூலையைத் தொடர்ந்து, பல பெரிய படங்கள் திரைக்கு வரவிருப்பதால், பல்வேறு திரைப்படத் துறைகள் இப்போது நிகழ்வுகள் நிறைந்த ஆகஸ்ட் மாதத்திற்கு தயாராகி வருகின்றன. ரஜினிகாந்த் மற்றும் மோகன்லாலின் ’ஜெயிலர்’ மற்றும் அக்‌ஷய் குமாரின் ’OMG 2’ முதல் துல்கர் சல்மானின் ’கிங் ஆஃப் கோதா’ வரை, பட்டியல் நீண்டது.

எப்பொழுதும் போல, தற்போது அனைவரின் கவனமும் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினிகாந்த் படத்தின் மீது தான் உள்ளது, இந்தப் படம் ஆகஸ்ட் 10, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: இங்க நான் தான் கிங்… நான் வைச்சது தான் ரூல்ஸ்… மாஸ் டைலாக்குடன் ஜெயிலர் 2-வது சிங்கிள் ப்ரமோ

இருப்பினும், மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது, மலையாள இயக்குனர் சக்கிர் மடத்தில், தமிழ் திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 2021 ஆம் ஆண்டில் கேரள திரைப்பட வர்த்தக சபையில் (KFCC) "ஜெயிலர்" என்ற தலைப்பை பதிவு செய்ததாகக் கூறினார். மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தனது படம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மலையாளத்தில் மாற்று தலைப்பில் தமிழ் படத்தை வெளியிட பரிசீலிக்குமாறு சக்கிர் மடத்தில் கேட்டுக் கொண்டார். இருப்பினும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும், அதே தலைப்பில் வெளியிட விரும்புவதாகவும் அறியப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

“தமிழ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸுக்கு எங்கள் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்ப முயற்சி எடுத்தோம். அந்த கடிதத்தில், கேரளாவில் படத்திற்கு மாற்று தலைப்பை பயன்படுத்துவதை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டோம். இந்த மின்னஞ்சலின் நகல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கும் (SIFCC) அனுப்பப்பட்டது. அவர்களின் படத்தில் மோகன்லால், விநாயகன் போன்ற மலையாள நடிகர்கள் நடித்திருப்பதால், அவர்களின் படம் வெளியாவதால் எங்கள் படத்தின் மதிப்பு குறையும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கை. ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து, சன் பிக்சர்ஸ் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம் என்றும், இந்த நிலையில் தலைப்பை மாற்றுவது அவர்களுக்கு சாத்தியமற்றது என்றும் அவர்களிடமிருந்து ஒரு பதிலைப் பெற்றோம். அவர்களின் முடிவு இருந்தபோதிலும், எங்கள் திரைப்படத்தை வெளியிடுவதைத் தொடர நாங்கள் தீர்மானித்தோம், அதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் வழக்கறிஞரிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது, அதாவது தயாரிப்பு நிறுவனமானது எங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நாங்கள் அதே தலைப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்,” என்று கோல்டன் வில்லேஜ் பேனரின் கீழ் திரைப்படத்தை தயாரித்த எழுத்தாளர்-இயக்குனர் சக்கிர் மடத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

publive-image

சக்கிர் மடத்தில் 2021 இல் KFCC இல் “ஜெயிலர்” என்ற தலைப்பைப் பதிவு செய்ததைக் காட்டும் ஆவணம். (படம்: சக்கிர் மடத்தில்)

“இந்தப் படத்தை நான் ஆசையில்தான் உருவாக்கினேன், அதுவும் கடன் வாங்கித்தான். சன் பிக்சர்ஸ் போல நான் பெரியவன் இல்லை. இருப்பினும், அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளதால், எனக்கும் வேறு வழியின்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கு ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று சக்கிர் கூறினார். மேலும், "நாங்கள் KFCC இல் ஆகஸ்ட் 13, 2022 முதல் ஆகஸ்ட் 12, 2023 வரையிலான காலத்திற்கு தேவையான கட்டணத்தைச் செலுத்தி தலைப்பைப் புதுப்பித்துள்ளோம்." என்றும் சக்கிர் கூறினார்.

எவ்வாறாயினும், "தேவையான அனைத்து நடைமுறைகளுக்கும் இணங்கியுள்ளதால்" தனது படத்திற்கு எந்த சிரமமும் ஏற்படாது என்று KFCC உத்தரவாதம் அளித்ததாக சக்கிர் கூறினார். இந்த செயல்முறையை விவரித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “KFCC யில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தவுடன், எதிர்காலத்தில் ஏதேனும் மோதல்களைத் தடுக்க பொதுவாக SIFCCக்கு ஒரு அறிவிப்பு அனுப்பப்படும். எங்கள் சூழ்நிலையில், KFCC இந்த செயல்முறையை உடனடியாக மேற்கொண்டதாகக் கூறுகிறது. இருப்பினும், எங்கள் பதிவு தொடர்பாக SIFCC இல் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் எதுவும் தெரியாமல் உள்ளோம்,” என்று சக்கிர் கூறினார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் தனக்கு ஆதரவையும் ஒற்றுமையையும் காட்டியுள்ளதாக சக்கிர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் படத்தை முடிக்க தனது முயற்சிகள் இருந்தபோதிலும், இது மிகவும் சவாலான முயற்சியாக மாறியது என்று சக்கிர் விளக்குகிறார். இதன் விளைவாக, இப்போது ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் தங்கள் ஜெயிலர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 1957 இல் நடக்கும் கதையாக, 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் டிரெய்லர் ஜூலை 21 அன்று வெளியிடப்படும்.

பொதுவான திரைப்பட தலைப்புகள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, மனோரமா ஆன்லைன் நிறுவனத்திடம் KFCC தலைவர் ஜி சுரேஷ் குமார், “இருப்பினும், மலையாளப் படமான ஜெயிலருக்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம், எனவே அந்த தலைப்பில் படத்தை வெளியிடுவதில் அவர்கள் எந்த சிக்கலையும் சந்திக்கக்கூடாது. இருப்பினும், தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வெளியான பிறகு அதே பெயரில் கேரளாவில் படத்தை வெளியிட ரஜினியின் படத் தயாரிப்பாளர்கள் நினைத்தால், அது உண்மையில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்,” என்று கூறினார்.

'ஆகஸ்ட், 2021 இல் தலைப்பு பதிவு செய்யப்பட்டது; டிசம்பரில் படப்பிடிப்பு முடிந்தது'

“ஸ்கிரிப்டிங் மற்றும் லொகேஷன் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது, ​​ஆகஸ்ட் 13, 2021 அன்று “ஜெயிலர்” என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக கேரள ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்தோம். தலைப்பைப் பதிவு செய்வதற்கு முன், இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் தியான் ஸ்ரீனிவாசனுடன் ஒப்பந்தம் செய்தோம். அதன் பிறகு நடிகை திவ்யா பிள்ளையுடன் ஒப்பந்தம் செய்து, விதிகளின்படி KFCC க்கு முக்கிய நடிகர்களின் பெயர்களை தெரிவித்தோம். நவம்பர் 6, 2021 அன்று பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் பழனியில் எங்கள் “ஜெயிலர்” படப்பிடிப்பைத் தொடங்கி, டிசம்பர் 12 அன்று ஒரு பாடலைத் தவிர்த்து படப்பிடிப்பை முடித்தோம். இரண்டு மாதங்கள் கழித்து அந்த குறிப்பிட்ட பாடலின் படப்பிடிப்பை முடித்தோம். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை உடனடியாகத் தொடங்க முயற்சித்தாலும், பணச் சிக்கல்கள் காரணமாக தாமதமாகி, மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் சாதகமான சூழ்நிலை உருவானது,” என்று சக்கிர் கூறினார்.

“மே 2022 இல் நடைபெறும் ‘கம் ஆன் கேரளா’ நிகழ்வில் எங்கள் திரைப்படத்தின் டிஜிட்டல் போஸ்டரை வெளியிடுவதற்கான ஆரம்ப நோக்கம் இருந்தபோதிலும், கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக நிகழ்ச்சி ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில், ஜூன் 26 அன்று டிஜிட்டல் போஸ்டரை வெளியிட்டு, பிராந்திய மலையாள ஊடகங்கள் மூலம் பகிர்ந்தோம். இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் என்ற மற்றொரு படம் வரவிருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. எங்கள் வெளியீட்டிற்கு 10 நாட்களுக்கு முன்பே அவர்கள் தங்கள் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இருப்பினும், எங்கள் படத்தை ஆகஸ்ட் 2022 இல் வெளியிடுவது எங்கள் திட்டமாக இருந்ததால், இந்த குறுகீட்டைக் கண்டுக் கொள்ளவில்லை. காலப்போக்கில், நாங்கள் எங்கள் திட்டத்தில் மிகவும் மூழ்கிவிட்டோம், அதை முற்றிலும் மறந்துவிட்டோம். துரதிர்ஷ்டவசமாக, நிதிச் சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் தாமதத்தை எதிர்கொண்டோம். இந்த காலகட்டத்தில்தான் தமிழ் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தனர், ”என்றும் சக்கிர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Rajinikanth Malayalam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment