James Vasanthan on Ilayaraja music Tamil News: இசைஞானி இளையராஜாவின் இசை இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலமாக இளையராஜா மீது பல விதமான குற்றசாட்டுகள் வருகின்றன. குறிப்பாக மேடை நாகரீகம் இல்லாமல் இருப்பது, மற்றவர்களை கேவலமாக பேசுவது என பலர் இளையராஜாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.
Advertisment
அவர்களில் இசையமைப்பாளரும், தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனும் ஒருவராக இருக்கிறார். இவர் பல காலமாகவே இளையராஜா மீது பலவிதமான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் இளையராஜாவைவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதில் இளையராஜா ஒரு சக மனிதராக அவர் மிகவும் மட்டமானவர் என்றெல்லாம் விமர்சனம் செய்து இருந்தார்.
இந்நிலையில், இளையராஜா இசைமத்த பாடலில் பிழை இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். ரஜினி இயக்கிய ‘வள்ளி’ திரைப்படத்தில் என்னுள்ளே என்னுள்ளே பாடல் பெரும் ஹிட் அடித்தது . இந்த பாடல் குறித்து பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘ நேற்றுதான் இந்தப் பாடல் வரியைப் பார்த்தேன், அதிர்ச்சியுற்றேன். எப்படி இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இந்தப் பிழையை அனுமதித்தார் என்று!
Advertisment
Advertisements
"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” இத்தனை நாளும் அது “… பல மின்னல் ஏழும் …” என்றே நினைத்திருந்தேன். ஒன்று, அந்தக் குறில் அந்த சந்தத்துக்கு வராது என்று சொல்லி கவிஞரை அந்தச் சொல்லை மாற்ற வைத்திருக்க வேண்டும். அல்லது, அது நன்றாக இருக்கிறதாய் நினைக்கும் பட்சத்தில் அதை குறிலாகப் பாடகரை பாடவைத்திருக்க வேண்டும்.
சில இடங்களில் சில ஒப்புரவுகள் செய்வது தவிர்க்க இயலாதுதான் என்றாலும், இவ்வளவு அப்பட்டமான சிதைவை நியாயப்படுத்தவே முடியாது. இது மொழிக்குச் செய்த இரண்டகம். சிலர் விளக்கச் சொல்லி கேட்பதால் அதையும் இங்கேயே சேர்த்து விடுகிறேன். இந்த சந்தம் – தன்னன்னா தன்னன்னா – தன தன்னன் னானன் னானா இரண்டாவது வரியின் இரண்டாவது சீர் “னானன்..” ‘னா’ என்கிற நெடிலுடன் தொடங்குகிறது. அதற்கு எழுதப்பட்டிருக்கிற ‘எழும்’ என்பது குறிலுடன் தொடங்குகிறது.
அதை இந்தப் பாடலில் பாடியிருப்பது போல சமத்தில் பாடினால் நெடிலாக மட்டுமே பாட இயலும். அதைச் சரிசெய்ய விழைந்தால், சமம் தள்ளிப் பாடினால் குறிலாக ஒலிக்கை வைக்க இயலும். இங்கே பிழையாக எழுதப்பட்டு, பிழையாகவே பாடப்பட்டிருக்கிறது என்பதுதான் செய்தி. குறில்-நெடில் என்பவையே மொழியின் அடிப்படை. கவிஞர்கள் சந்தத்துக்கு பாடல் எழுதும்போது இதுதான் அவர்களது மிகப்பெரிய சவால். எல்லா நல்ல கவிஞரும் பிழையின்றி எழுதுபவர்தான்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil