ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்திற்கு 3 விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் நாயகன் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிகப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வாரிசு படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான முதல் படம் மாஸ்டர். இந்த படத்தில் நடித்த விஜய்க்கு ஜப்பான் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் வெளியாகும் படங்களுக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த படம் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு தமிழில் வெளியான படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த கலை அமைப்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் பா.ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதும், தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத்க்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த திரைக்கதை பிரிவில் மாநாடு படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
OSAKA Tamil Film Festival Awards! pic.twitter.com/hXxaSIoDwJ
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 21, 2023
மாநாடு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும், கர்ணன் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் தேனி ஈஸ்வர், சிறந்த நடன அமைப்பு பிரிவில், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்காக தினேஷ் குமார், சிறந்த துணை நடிகர் ஜெய்பீம் மணிகண்டன், சிறந்த துணை நடிகை ஜெய்பீம் லிஜோமோல் ஜோஸ், சிறந்த நகைச்சுசை டாக்டர் படத்திற்காக நடிகர் ரெட்டின் கிங்ஸ்லே,சிறந்த படத்தொகுப்பு மாநாடு படத்திற்காக பிரவீன் கே.எல். மற்றும் சிறப்பு விருது யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“