தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகுமார். சிறந்த ஓவியர், பேச்சாளர் மற்றும் கம்பராமாயண சொற்பொழிவாளராக பல பரிமாணகங்களில் வலம் வரும் சிவகுமார், தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்ற படம் மூலம் 1965ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 190 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளன.
தற்போது, இவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியிருக்கையில், சிவகுமார் ஒருமுறை நடிகர் சங்கம் மீட்டிங்கில் கார்த்திக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய அறிவுரையை பேசிய காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “என் மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க நான், சூர்யா, என் மனைவி எல்லோரும் ஜெயலலிதா அம்மாவை பார்க்க சென்றிருந்தோம்.
அப்போது அவர் திருமணம் எப்போது என்று கேட்டார். நான் ஐந்திலிருந்து ஆறு மணிக்குள் நடைபெறும் என்று சொன்னேன்.
அப்போது அம்மா உன்னுடைய திருமணத்திற்கு தான் வர முடியவில்லை. உன் மகளுடைய திருமணத்திற்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னார். நான் ஒன்னும் பிரச்சனை இல்லை அம்மா. 5 மணிக்கு வருவது உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். நீங்கள் திருமணம் முடிந்த பிறகு கூட வாருங்கள் என்று சொன்னேன்.
அதெல்லாம் ஒன்றுமில்லை நான் வருகிறேன் என்று கூறிவிட்டு, இரண்டு மூணு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி 4. 50 மணிக்கு திருமணத்திற்கு வந்தார். ஒரு நாட்டின் முதலமைச்சராக இருந்து தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை மதித்து வந்தார்.
அந்த சமயத்தில் தான் சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது திருமணத்திற்கு ஓத்துக்கொண்டு பத்திரிக்கை வைக்க நான், கார்த்தி, என்னுடைய மனைவி ஆகியோர் அம்மாவை பார்க்க சென்று இருந்தோம்.
அப்போது ஜெயலலிதா அவர்கள், வீட்டில் ஒரு காதல் கல்யாணம் சரி. இருந்தாலும் கார்த்தி நீ அம்மாவுக்கு பிடித்த பெண்ணாய் பார்த்து உங்க பிரிவில் கல்யாணம் செய்துகொள் என்று அறிவுரை சொன்னார்.

உண்மையாலுமே யாராலும் இந்த மாதிரி சொல்ல முடியாது. அதனால் தான் அவர் என்றும் தமிழக மக்களின் அம்மாவாக இருக்கிறார். அதேபோல் என்னுடைய மகன் கார்த்திக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தோம் என்றார்.
ஜெயலலிதா அம்மா கார்த்திக்கு சொன்ன அட்வைஸ் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil