ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது அடுத்த படமாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட எமர்ஜென்ஸி படத்தை இயக்க உள்ளதாக புதன்கிழமை சமூக ஊடகமான கூ-வில் தெரிவித்துள்ளார்.
இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட எமர்ஜென்ஸி படத்தின் புராஜக்ட்டை நடிகை கங்கனா ரனாவத், பிங்க், கஹானி, கஹானி 2, டி-டே, ராக்கி ஹேண்ட்சம் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய ரிதேஷ் சஹா எழுதுவார் என்று தெரிவித்துள்ளார்.
எமர்ஜென்ஸி பற்றி பேசுகையில், கங்கனா ரனாவத் குறிப்பிட்டிருப்பதாவது: “நான் மீண்டும் இயக்குனராவதில் மகிழ்ச்சி, ஒரு வருடத்திற்கும் மேலாக ‘எமர்ஜென்ஸி’யில் பணிபுரிந்த பிறகு, என்னை விட வேறு யாரும் இதை இயக்க முடியாது என்று நான் இறுதியாகக் கண்டேன். அற்புதமான எழுத்தாளர் ரித்தேஷ் ஷாவுடன் சேர்ந்து பணிபுரிவது பல்வேறு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தியாகம் செய்யவேண்டும் என கருதினாலும், அதைச் செய்ய நான் உறுதியாக இருக்கிறேன், என்னுடைய உற்சாகம் அதிகமாக இருகிறது. இது ஒரு மிகப்பெரிய பயணமாக இருக்கும். இது மற்றொரு லீக்கிற்கான எனது பாய்ச்சல் # அவசரநிலை # இந்திரா.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவத் தனது முந்தைய அறிக்கையில், எமர்ஜென்ஸி ஒரு வாழ்க்கை வரலாறு அல்ல, ஆனால், அது ஒரு அரசியல் நாடகம் என்று தெளிவுபடுத்தியிருந்தார். மேலும், “இது இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு அல்ல. இது ஒரு பெரிய பீரியட் படம். துல்லியமாகச் சொல்வதானால், இது ஒரு அரசியல் நாடகம், இது தற்போதைய இந்தியாவின் சமூக-அரசியல் நிலப்பரப்பைப் புரிந்துகொள்ள எனது தலைமுறைக்கு உதவும்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தலைவி படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இது மட்டுமில்லாமல், நடிகை கங்கனா ரனாவத், தேஜாஸ், தாக்காட், மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ்: தி லெஜண்ட் ஆஃப் டிட்டா ஆகிய படங்களை கையில் வைத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”