Jayalalithaa Biopic: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பல திரைப்படங்களும், வெப் சிரீஸ்களும் தயாரிப்பில் உள்ளன. கங்கனா ரனாவத்தை ஹீரோயினாக வைத்து, இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், நித்யா மேனனை ஹீரோயினாக வைத்து அறிமுக இயக்குநர் பிரியதர்ஷினியும் வெவ்வேறு தலைப்புகளில் படம் இயக்கி வருகின்றனர்.
இதற்கிடையே ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதா எனது அத்தை. அவரது சட்டப்படியான வாரிசு நான். என்னுடைய அனுமதியைப் பெறாமல், எனது அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவும், இணையதள தொடராகவும் எடுக்க சிலா் முயற்சிக்கின்றனா். சென்னையைச் சோ்ந்த திரைப்பட இயக்குநா் ஏ.எல். விஜய், ‘தலைவி’ என்ற பெயரில் தமிழ் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், ஹைதராபாத்தைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் ‘இந்தூரி ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியில் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதள தொடா் எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனா். எனவே என்னுடைய அனுமதி இல்லாமல் எனது அத்தையும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா குறித்த திரைப்படத்தையோ, இணையதள தொடா்களையோ எடுக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா குறித்த திரைப்படத்தையோ, இணையதள தொடா்களையோ எடுக்க தடை விதிக்கக் கோரி தீபா, உரிமையியல் வழக்கு தொடர அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.