Jayalalithaa Biopic: நடிகை கங்கனா ரனாவத் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் படு பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
Advertisment
அரவிந்த் சாமி
இந்தப் படத்தில் தற்போது நடிகர் அரவிந்த் சாமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்த “செக்க சிவந்த வானம்” திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்த அரவிந்த் சாமி, ஜெயலலிதா பயோபிக்கில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர் இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆகையால் ”தலைவி” படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கிறாராம் அரவிந்த் சாமி.
முன்னணி செய்தி நிறுவன அறிக்கையின் படி, "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 1965-லிருந்து 1973-க்குள் 28 பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். ஆகையால் எம்.ஜி.ஆரின் பாத்திரத்திற்கு நியாயம் செய்ய ஒரு தகுதியான நடிகர் தேவைப்பட்டது. அதே நேரத்தில் அந்த நடிகர், தலைவி படம் உருவாகும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. எனவே, அவர்கள் அரவிந்த் சாமியை எம்.ஜி.ஆர். வேடத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்” எனத் தெரிய வருகிறது.
தலைவி படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அரவிந்த் சாமி நவம்பர் 15-ஆம் தேதி படக்குழுவில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.