S Subhakeerthana & Antara Chakraborthy
ஜெயம் ரவி நடித்திருக்கும் 'கோமாளி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகிறது. இப்படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ஜெயம் ரவி அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இதோ,
கோமாளி வழக்கமான டைட்டில் இல்லையே?
ஆமாம். ஸ்க்ரிப்ட்டுக்கு ஏற்ற தலைப்பாக அதை தேடிப் பிடித்தோம். எதிர்மறை இல்லாத நல் உணர்வு கொண்ட படமாக கோமாளி இருக்கும். நாம் கடந்த காலத்தின் நிறைய விஷயங்களை மறந்திருப்போம், அவற்றையெல்லாம் இப்படம் நினைவூட்டும். அந்த பழைய தருணங்களில் இருந்து 'நல் உணர்வுகள்' உங்களுக்கு கிடைக்கும். 20 வருடங்களுக்கு முன்பு 'தண்ணீர் விற்பனைக்கு' என்ற கான்செப்டே கிடையாது. ஆனால், இப்போது தண்ணீரையும் விற்றுக் கொண்டிருக்கிறோம். அதனால், கேள்வி என்னெவெனில், "கோமாளிகள்" நம்மை மாற்றிவிட்டார்களா அல்லது அந்த மாற்றங்களுக்கு நாம் தான் காரணமா? என்பதை இப்படத்தில் நீங்கள் காண்பீர்கள்.
இந்த தலைப்பை பரிந்துரை செய்தது நான் தான்.
பல்வேறு தோற்றங்களில் கோமாளி படத்தில் தெரிகிறீர்கள். எந்த கெட்டப் உங்களுக்கு மிகவும் பிடித்தது?
கோமாளி படத்தில் மொத்தம் 9 தோற்றத்தில் நடித்துள்ளேன். அதில், 4-5 மட்டுமே முக்கியமானவை. பள்ளி மாணவன், மருத்துவமனையில் இருப்பது போன்ற தோற்றம், 90sகளில் வரும் தோற்றம் என பல கெட்டப்புகள் உண்டு. இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு வயதான தோற்றமும் இருக்கிறது.
மீண்டும் பள்ளிப்பருவத்துக்கு சென்றது எப்படி இருந்தது?
பள்ளித் தோற்ற காட்சிகள் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு இருக்கும். அந்த பாத்திரம் மிகச் சரியானதாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். முதலில், யாரேனும் ஒரு இளம் நபரை நடிக்க வைக்க எண்ணினோம். ஆனால், நானே அந்த கேரக்டரை செய்யலாம் என முடிவு செய்தேன். இல்லையெனில், ரசிகர்களால் அந்த பாத்திரத்தோடு ஒன்ற முடியாமல் போய்விடும்.
இதற்காக, இரண்டு மாதங்களுக்கு வெறும் தக்காளி மற்றும் கேரட் மட்டுமே சாப்பிட்டேன். அந்த ரோலுக்கு மிகச் சரியாக நம்மை பொருத்திக் கொள்ள வேண்டும். ஒர்க் அவுட் செய்வது என்பது சரிவராது. ஏனெனில், எனது தோள்பட்டை அகன்றது. ஆனால், என்னை இளமையாக காட்ட வேண்டும் என்பதால், கார்டியோ மூலம் சிறப்பு டயட் எடுத்துக் கொண்டேன். இளம் உடல் அமைப்பு மற்றும் தோற்றத்தை பெற, இரண்டரை மாதங்கள் தேவைப்பட்டது. 20 கிலோ குறைக்க வேண்டும் என முயற்சித்தேன், ஆனால் 17 கிலோ தான் குறைக்க முடிந்தது.
மனரீதியாக எப்படி 17 வயது மாணவன் ரோலுக்கு தயார் செய்து கொண்டீர்கள்?
எனது பள்ளிப் பருவ நாட்கள் தான் இந்த கேரக்டருக்கு உதவின. வேறு எந்த ஆராய்ச்சியும் நான் செய்யவில்லை. பேப்பரில் விமானம் செய்தும், புக் கிரிக்கெட் விளையாடியும் வளர்ந்த 90's கிட் தான் நானும். அதை எல்லாவற்றையும் மீண்டும் கிரகித்துக் கொண்டேன். எனது பள்ளி கால உடலமைப்பை பெற, எனது இள வயது வீடியோக்களை மீண்டும் பார்த்தேன்.
பள்ளியில் உங்கள் க்ரஷ் யார்?
நிச்சயமாக, நான் பள்ளிக் காலத்தில் ஒருவரை காதலித்தேன். ஆனால், இப்போது அவர் எங்கிருக்கிறார் என்று எனக்கு தெரியாது. அவர் யார் என்று சொல்லக் கூடாது என்றும் நான் நினைக்கிறேன். (சிரிப்புடன்)
கோமாளி உங்களது 24 வது திரைப்படம். அடுத்தது?
எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும், 25வது படம் என்பது மற்றவர்களை போல எனக்கும் முக்கியமானது. அதனை, போகன் பட இயக்குனர் லக்ஷ்மன் இயக்குகிறார். மேலும், 'மனிதன்' இயக்குனர் ஐ அஹ்மது இயக்கும் ஆக்ஷன் - த்ரில்லர் படம் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளேன். அதேபோல், அடுத்த வருடம் நிச்சயம் 'தனி ஒருவன்' இரண்டாம் பாகம் எடுக்கப்படும்.
ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 16 வருடங்கள் ஆகிறதே.
சினிமாவில் நுழைந்த போது, 'உனது ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக எண்ண வேண்டும்' என்று என் தந்தை தெரிவித்தார். இப்போது வரை அந்த அறிவுரையை நான் ஃபாலோ செய்து வருகிறேன். சினிமா துறையில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நான் என் தவறுகளை மீண்டும் செய்வதில்லை என நினைக்கிறேன்.
மனதளவிலும், உடலளவிலும் எந்த படத்திற்காக நீங்கள் அதிகம் போராடினீர்கள்?
பேராண்மை, ஆதிபகவன் மற்றும் வனமகன். பெரும்பாலான என் சகோதரரின் படங்களும் கடுமையாகவே இருக்கும்.
உங்கள் சகோதரர் இயக்கத்தில் நடிக்கும் போது, எப்போதாவது அவர் சத்தம் போட்டிருக்கிறாரா?
இல்லை, ஒரு இயக்குனராக அவர் யாரிடமும் சத்தம் எழுப்பமாட்டார். அவர் ஒரு சைலன்ட் கில்லர்.
கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்தீர்கள். உங்கள் நடிப்பு குறித்து கமல் ஏதாவது கூறியிருக்கிறாரா?
எனது முதல் படத்தின் பூஜையின் போது, கமல் சார் தான் படத்தை தொடங்கி வைத்தார். ஜெயம் பார்த்தபிறகு, நடிப்பை நிறுத்த வேண்டாம் என கூறினார். அவரது ஆலோசனைப்படி, வெளிநாட்டுக்குச் சென்று, நடிப்பின் பல டெக்னிக்குகளை கற்று வந்தேன்.