Vishnu Vishal in Jersy Tamil Remake: கடந்த ஏப்ரலில் தெலுங்கு சினிமாவையே கலக்கியது ‘ஜெர்ஸி’ திரைப்படம். இயக்குநர் கெளதம் தின்னானுரி இயக்கியிருந்த இந்தப் படத்தில், நானி, ஷ்ரதா ஸ்ரீநாத், சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசை அனிருத். கிரிக்கெட்டின் உச்சத்திலிருந்து விலகிய வீரர் ஒருவர் தனது மகனின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்வதற்காக மீண்டும் பேட்டைத் தூக்கிக் கொண்டு ஃபார்முக்கு திரும்புவதை உணர்வுப் பூர்வமாக காட்டியது தான் ஜெர்ஸி.
தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நானியின் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிப்பதாகவும், படத்தை ’ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகியப் படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே, இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஜீவா’ என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்த விஷ்ணு, புரபஷனல் கிரிக்கெட்டராக வேண்டும் என்ற ஆசையில் முயற்சித்ததை அவரே பலமுறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.