தொலைக்காட்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான இமான் அண்ணாச்சி வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’குட்டி சுட்டீஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் இமான் அண்ணாச்சி.
இவர் 2006-ல் வெளியான சென்னைக் காதல் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.
அதன் பிறகு தலைநகரம், வேட்டைக்காரன், கோ, நீர்ப்பறவை, மரியான், ஜில்லா, கோலிசோடா, கயல், புலி, சிங்கம் 3, நிமிர், சாமி 2 உட்பட பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவரது வீடு சென்னை அரும்பாக்கத்திலுள்ள ராஜீவ் காந்தி நகரில் உள்ளது. இந்நிலையில் வீட்டில் பீரோவில் இருந்த 41 சவரன் நகைகளை காணவில்லை என அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் அண்ணாச்சி.
காணாமல் போன அந்த நகைகளின் மதிப்பு பல லட்சம் எனக் கூறப்படுகிறது.
தற்போது இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதே மாதிரி சில நாட்களுக்கு முன்னர் தி.நகரிலுள்ள நடிகை வடிவுக்கரசி வீட்டிலும் நகைகள் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.