சன் டிவியின் புதிய சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் நடிகர் லிவிங்க்ஸ்டனின் மகள் ஜோவிதா லிவிங்க்ஸ்டன்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பூவே உனக்காக. இந்த சீரியலில் நாயகியாக நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்து வருகிறார். நடிகர் அருண் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர்களுடன் தேவிப்ரியா, சுதா ராமானுஜம், சாயா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் ஹீரோயின் பூவரசியின் தோழி கீர்த்தியாக நடிகர் லிவிங்க்ஸ்டனின் மகள் ஜோவிதா நடித்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஜோவிதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
நன்றாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜோவிதா, திடீரென சீரியலில் இருந்து விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஜோவிதா தான் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறாததால், ஏதோ பிரச்சனை நடந்துள்ளதாக வதந்தி பரவியது. இதனையடுத்து ஜோவிதா, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்தார். அதில் தான் மேற்படிப்பு படிக்க செல்வதால் சீரியலில் இருந்து விலகுவதாகவும், தனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி என பதிவிட்டு இருந்தார். மேலும், கூடிய விரைவில் எனது அடுத்த ப்ராஜெக்ட்டுடன் விரைவில் உங்களை சந்திப்பேன் என்றும் ஜோவிதா பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், ஜோவிதா பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகும் போது கூறியதைப் போல் மீண்டும் சன் டிவியின் புதிய சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க வருகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜோவிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டுடியோவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் ஆன்மாவை தூண்டுவதை தேடுங்கள் என்ற கேப்ஷனுடன் #freshbegginings #cantwait #suntv உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை சேர்த்து கேப்ஷன் கொடுத்து உள்ளார். இதன் மூலம் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஜோவிதா லிவிங்ஸ்டன் நடிப்பது உறுதியாகி உள்ளது.
சன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள கஸ்தூரி சீனிவாசா என்ற கன்னட சீரியலின் ரீமேக்கில் ஜோவிதா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீரியலில், திரைப்பட நடிகை அம்பிகா, ’பூவே பூச்சூடவா’ புகழ் கார்த்திக் வாசு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil