Junga Tamil Movie Release Date: ஜுங்கா நாளை ரிலீஸ் ஆகிறது
ஜுங்கா ஒரு பார்வை
ஜுங்கா படத்தின் நாயகன் ஒரு டான். கஞ்ச டான். இதுவரை வந்த டான் படங்களை கிண்டல் செய்யும் ஸ்பூஃப் வகையில் இந்த டான் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. கொலை செய்வதற்கு ஜீப்பில் செல்கிற வழியில், ஜீப்பை ஷேர் ஆட்டோவாக்கி காசு வசூலிக்கிற கஞ்ச டானின் காட்சிகள் திரையரங்கில் சிரிப்பை ஏற்படுத்துகின்றன.
யார் இந்த ஜுங்கா ?
ஜுங்கா இப்படி கஞ்சத்தனமாக பணம் சேர்ப்பது தனது அம்மாவின் வழி வந்த பூர்வ சொத்தான திரையரங்கை செட்டியாரிடமிருந்து மீட்பதற்காக. ஆம், அதற்காகத்தான் கொலைகள் செய்கிறார்.
இப்படி கொலை செய்து பணம் சேர்த்து தியேட்டரை திரும்பப் பெறுவதற்கு நேரடியாக செட்டியாரின் கழுத்திலேயே கத்தி வைத்திருக்கலாம். கடைசியில் ஜுங்காவும் அதைத்தான் செய்கிறார்.
செட்டியாரிடம் ஒரு கோடி ரூபாய் பணத்துடன் செல்லும் டான் ஜுங்கா, செட்டியார் தியேட்டரை எழுதித்தர மறுத்து, ஏழைகளைப் பற்றி தவறாக பேசியதும் கொதித்தெழுந்து, ஏண்டா ஏழைங்கன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமாகப் போச்சா? கேய்ல் திட்டம், நியூட்ரினோன்னு ஏண்டா ஏழைங்க வயித்திலேயே அடிக்கிறீங்க என்று வீர வசனம் பேசுகிறார்.
பேசுவது யார்? டான் ஜுங்கா. டான் ஜுங்காவின் வேலை என்ன? கொலை உள்பட அனைத்து சமூக விரோத செயல்கள் செய்வது. அவருடன் இருப்பவர்களை அவர் எப்படி நடத்துகிறார்? ஒரு டீ கூட வாங்கித் தராமல் பிச்சைக்காரர்களைப் போல.
எத்திக்ஸ் என்ன?
கூசாமல் கொலைகள் செய்து, தனது கூட்டாளிகளை அடிமைகளைப்போல் நடத்தும் ஜுங்கா ஏழைகள் குறித்து வீரவசனம் பேசுதற்கு பின்னாலுள்ள எத்திக்ஸ் என்ன?
ஒன்றுமில்லை. மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கிற வாழ்வாதாரப் பிரச்சனைகளை – அது கதைக்கு பொருந்துகிறதோ இல்லையோ – பேசினால் கைத்தட்டல் கிடைக்கும். சமூகப் பிரச்சனையை பேசிட்டாங்கப்பா என்ற பெருமிதம் வந்து சேரும்.
இப்படி நாம் எழுதினால், சினிமான்னா பொழுதுப்போக்கு, அதில் இப்படி பேன் பார்த்தால் எதையும் ரசிக்க முடியாது என்பார்கள்.
சொந்தப் பிரச்சனைக்காக ஊர் பேர் தெரியாதவர்களை கொலை செய்யும் ஒருவன் கதைக்கும் காட்சிக்கும் கதாபாத்திரத்துக்கும் சம்பந்தமில்லாமல் சமூகப் பிரச்சனை குறித்துப் பேசினால் கைத்தட்டுவது என்ன மாதிரியான ரசனை?
இந்த ரசனையை வைத்துக் கொண்டுதான் நாம், தமிழில் நல்ல சினிமா வரலை என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த மனநிலை எப்படி உருவாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முயல்வது அவசியம்.
நிஜத்தில் டான் ஜுங்கா போன்ற ஒரு கதாபாத்திரம் சமூகப் பிரச்சனை குறித்து பேசினால், அடுத்த கணமே, நீ உன் வேலையைப் பார்த்து போ, உன் யோக்கியதை எங்களுக்கு தெரியும் என்று அடித்து ஓட்டுவோம். அதே நாம்தான் திரையரங்கில் அந்தக் காட்சியை பார்த்து ரசித்து கைத்தட்டுகிறோம்.
திரையில் அந்த வசனத்தை பேசுகிறவர் அப்படத்தின் நாயகன். அந்த நாயகன் யார் என்பது நமக்கு தெரியும். அதன் காரணமாகவே அவர் எப்படிப்பட்டவராக திரையில் காட்சிப்படுத்தப்பட்டாலும், அனைத்தையும் தாண்டி அவரது செயலை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக்கு வந்துவிடுகிறது. மேலும், நமது ஆழ்மனம் ஒவ்வொன்றுக்கும் எப்படி எதிர்வினையாற்றுவது என்று தணிக்கை செய்து வைத்துள்ளது.
கவியரங்கம்
உதாரணமாக ஒரு கவியரங்கத்துக்கு செல்கிறோம். அங்கு இரண்டிரண்டு வரிகளாக சொல்லப்படும் கவிதையை ரசித்து கைத்தட்டுகிறோம். அதே கவிதையை முன்னறிவிப்பில்லாமல் ஒருவர் பேருந்து நிலையத்தில் வாசித்தால் நமது எதிர்வினை எப்படியானதாக இருக்கும்? நாம் கவியரங்கத்தில் ரசித்து கைத்தட்டிய கவிதை அது.
ஆனால், அந்த இடம் பேருந்து நிலையும், பொது இடம். கவிதை பிடித்தாலும் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவோம். ஒரே கவிதைதான். ஆனால், அதனை வாசிக்கிற இடம் மாறுபடும்போது, நாம் அதனை எதிர்கொள்ளும் முறையும் மாறிவிடுகிறது.
கவியரங்கத்தில் கவிதைகள் வாசிக்கப்படும், அதற்கு கைத்தட்ட வேண்டும் என்று நமது மனம் ஏற்கனவே தணிக்கை செய்து வைத்துள்ளது. அதனை அப்படியே அங்கு செயல்படுத்துகிறோம். அதுவே பொதுவெளியில் நமது மனம் திடுக்கிடுகிறது.
திரையரங்குகளிலும் இந்த கூட்டு உளவியல் செயல்படுகிறது. யாராவது சமூக கருத்துகளை சொன்னால் யோசிக்காமல் உடனே கைத்தட்டி வரவேற்கிறோம்.
சினிமா ஆர்கஸம்
இந்த தியேட்டர் ஆர்கஸம் இன்று அதிகரித்துள்ளது. கத்தி, வேலைக்காரன், மெர்சல் என்று தொடர்ச்சியாக இந்த தியேட்டர் ஆர்கஸத்தை குறிவைத்து படங்கள் வருகின்றன. ஜுங்கா படத்தின் காட்சியும் இதன் நீட்சியே.
சில தினங்கள் முன்பு இயக்குநர், கதாசிரியர் மதியழகன் சுப்பையா ஒரு நிகழ்வில் பேசுகையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் வரும் ஒரு காட்சியை குறிப்பிட்டார்.
அதில் மூன்று பேர் ஒரு பெண்ணை காதலிப்பார்கள். மூன்றாவது நபர் பவர் ஸ்டார் சீனிவாசன். உடனே சந்தானம் அவரை கிண்டலாக, நீயெல்லாம் பஸ் ஸ்டாப்ல வேலைக்கு போக கட்கத்தில் பையோட ஆன்டிங்க காத்திருப்பாங்க, அவங்களை உஷார் பண்ணு என்பார்.
உடனே திரையரங்கு சிரிக்கும். யோசித்துப் பாருங்கள். நாம் ஆன்டி என்பது யாரோ ஒருவருடைய அம்மா, அக்கா, தங்கைகள். ஆயிரத்துக்கும், ஐயாயிரத்துக்கும் நாள் முழுக்க வேலை பார்க்கிற அடித்தட்டு மக்கள். அவர்களைக் குறித்த மோசமான கிண்டலுக்கு எப்படி நம்மால் சிரிக்க முடிகிறது.
நமது ரசனை எப்படி மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை சுட்ட இந்தக் காட்சியை மதியழகன் சுப்பையா உதாரணமாக எடுத்துப் பேசினார். சினிமாவில் நமது சமூக அக்கறை என்பது பார்வையாளன் என்ற நிலையில் நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டியது. மேலடுக்கைத்தாண்டி கொஞ்சமேனும் யோசிக்க அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.