வாடி என் தங்கச்சிலை.... மஞ்சள் பூசிய முகம், பெரிய கம்மல்,மூக்கூத்தி, இழுத்து கட்டிய சேலை என அச்சு அசல் நம் வீட்டில் இருக்கும் அம்மாவை போலவே காலாவில் தோன்றி நம் மனதில் நீங்க இடத்தை பிடித்திருந்தவர் தான் நடிகை ஈஸ்வரி ராவ். 14 வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் திரைப்படத்தில் தனுஷின் அக்கா பாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார்.
அதில் தனுஷ் அவரின் அக்காவை பார்த்து, “ என்ன என் தலைவரை பார்த்து சைட் அடிக்கிறீயா?” என்று விளையாட்டாக கேட்பார். ஆனால் 14 வருடங்கள் கழித்து தனுஷ் தயாரித்த படத்திலியே ஈஸ்வரி, ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என்று எவருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். முதலில் ரஞ்சித் ஈஸ்வரிக்கு ஃபோன் செய்து காலா படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் இருக்கிறது எனறு சொன்னதும் அது ரஜினிக்கு அம்மா ரோலாக தான் இருக்கும் என்று ஈஸ்வரி நினைத்துள்ளார். அவர் மட்டுமில்லை அவரின் குடும்பமும் அப்படி தான் நினைத்துள்ளது. ஆனால் கடைசியில் கதையே மாறி, படத்தில் ரஜினிக்கு ஜோடியாக டான்ஸ், ரசிக்க வைக்கும் ரொமான்ஸ் காட்சிகள், அதிகப்படியான காதல், அக்கறை என அப்படி ஒரு கெமிஸ்ட்ரி பொருத்தம் காலாவுக்கும் செல்விக்கும்..
இதுப்பற்றி ஈஸ்வரி ராவ் பகிர்ந்திருக்கும் சில வார்த்தைகள், “ ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும். தமிழ் மக்கள் செல்வியாக என்னை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ரஞ்சித் என்னை காலா படத்திற்காக அனுகிய போது அம்மா ரோலாக தான் இருக்கும் என்று நினைத்தேன். பின்ன என்னங்க, வயசு 40 ஆயிடூச்சு இப்ப வந்து ஹீரோயினி ரோலா கிடைக்கும்னு எதிர்ப்பார்க்க முடியும். ஆனால் கடைசியில் ரஜினி சாருகே ஹீரோயின் என்றவுடன் முதலில் பயம் கலந்த பதற்றமே கண்ணில் தெரிந்தது.
ரஞ்சித் எனக்கு கதை சொன்ன விதமே எப்படி தெரியுமா?... நாளு பிள்ளைங்க பெத்தாலும் கெத்தாக இருப்பாங்க பாரு அவங்க மாதிரி தான் நீங்க. எனக்கு அப்படி ஒரு ரோல் தான் நீங்க எனக்கு பண்ணி தரனும்னு சொன்னாரு. அவரு சொன்ன மாதிரி தான் நடிச்சேன். ரஜினி சார் ஷூட்டிங் ஸ்பாட்டிலே எவ்வுளவோ சொல்லி தந்தாரு. சில சீன்ஸ்லாம் எனக்கு பதற்றம் வந்துரும்( சார் பக்கத்தில் நடிச்ச பின்ன வராதா) உடனே, கூல் ஈஸ்வரி.. ”இது உங்க சீன் இப்படியே பண்ணுங்க நல்ல வரும் நல்ல வரும்னு” டீம்மையே எனர்ஜி ஆகி விடுவார். தமிழகத்தில் மட்டுமில்லை காலா படத்தை பார்த்து பல மொழி மக்களும் எனக்கு கால் செய்து செல்வி அக்கா சூப்பர் .. சூப்பர்னு சொல்லும் போதும் வர ஃபீல் இருக்கே.. ரஜினி சார் இப்ப கூட ரொம்ப இளமையா இருக்குறாரு அதே எல்லாரும் ஸ்பாட்டுல நேரிலேயே பார்த்தோம் ” என்று படத்தில் வந்த கள்ளம் கபடமற்ற சிரிப்புடன் பேசியுள்ளார்.
அதே சமயத்தில் படத்திற்காக ஈஸ்வரி ராவ் எடை சற்றுக் கூடி, முகத்தை கருமையான நிறத்திற்கு மாற்றி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை உடல் அளவிலும் மாற்றிக் கொண்டுள்ளார். 1990 களில் வெளியான ஒருசில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் ஈஸ்வரி ராவ் தான் கதாநாயகி. குறிப்பாக பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ’ராமன் அப்துல்லா’ படத்திலும் ஈஸ்வரி ராவ் தான் கதாநாயகி. அதன் பின்பு காலா தமிழில் ஈஸ்வரி ராவை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றுள்ளது.