தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்வின் ஓரே லட்சியம் : காலா படவிழாவில் ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல்கள் தமிழ்,  தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இன்று வெளியிடப்படுகிறது.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இந்நிகழ்ச்சி குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷ் நிறுவனமான ‘வொண்டர்பார் ஸ்டூடியோஸ்’ தயாரித்துள்ளது. காலா கெட்டப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவருடன் பிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, ‘வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இந்தப் படத்தில் முதல் பாடல் சிங்கிள் டிராக் ‘செம்ம வெயிட்டு’ வீடியோ கடந்த மே 1ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்த ஒரு ப்ரிவ்யூ விடியோ கடந்த மே 7ம் தேதி வெளியிட்டார்.

kaala - music stage

காலா பாடல் வெளியீட்டு விழாவுக்கு போடப்பட்டுள்ள மேடை.

காலா பாடல் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவது இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு மாலை 4 மணி முதலே குவிய ஆரம்பித்துவிட்டனர். காலா பாடல் வெளியீட்டு விழா செய்தியை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள். LIVE UPDATE

இரவு 9.00 மணி : ரஜினி பேசினார். அப்போது அவர், ‘‘நான் சிவாஜி படத்துக்கு பின்னர் வெற்றி விழா எதிலும் கலந்து கொள்ளவில்லை. அந்த விழாவிற்கு வந்து வாழ்த்திய கலைஞர் சார் அவர்களின் குரலை கேட்க நான் மட்டுமல்ல தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. விரைவில் அவர் பேசுவார் என்று நம்புகிறேன். லிங்கா படத்தின் கதையை கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன போது, தண்ணீர் பற்றிய கதை என்றார். உடனேயே ஈடுப்பாடு வந்தது. நான் இமயமலை செல்வதே கங்கையைப் பார்க்கத்தான். அந்த படத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவதையும், அதற்காக அணை கட்ட சொத்து முழுவதையும் இழப்பதுதான் கதை. என் வாழ்நாளின் ஓரே ஆசை, தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு பின் நான் இறந்தாலும் இந்திய நதிகள் இணைக்கப்பட்டுவிடும். என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயத்துக்கு வருகிறேன். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. கட்டாயம் வரும். வரும் போது சொல்கிறேன்’’ என்றார்.

இரவு 8.55 மணி : படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் பேசுகிறார். ‘‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொண்டேன். வாழ்க்கையில் உழைத்து முன்னுக்கு வந்து உச்சத்துக்கு வருவது. அல்லது உச்சத்துக்கு வருபவர்களை விமர்சிப்பது. தொடர்ந்து 40 வருடம் உச்சத்துல இருக்கும் போது, அவரை வைத்து சம்பாதித்தவர்கள், வாழ்வு கொடுத்தவர்களே விமர்சிக்கும் போது அமைதியாக இருப்பார். அவரிடம் இருந்து பொறுமையை கற்றுக் கொண்டேன். தயாரிப்பாளரை எப்படி மதிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். அவரிடம் இருந்து பெருந்தன்மை, மன்னிக்கும் குணத்தைக் கற்றுக் கொண்டேன். வில்லன், குணச்சித்திர நடிகர், ஸ்டைல் மன்னன், இன்று சூப்பர் ஸ்டார்… நாளை… அது இறைவன் கையில். உங்களை போலவே காத்துக் கொண்டு இருக்கிறேன். பாஷா படம் வந்த போது, பத்து வயது. அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் பணம் சேர்த்து, கைதட்டி படம் பார்த்தேன். ஒரு ரசிகனாக இந்த படத்தை தயாரித்துள்ளேன்.’’ என்றார்.

இரவு 8.45 மணி : இயக்குநர் ரஞ்சித் படம் பற்றி பேசினார். ‘‘எனக்கு கிடைத்த ஸ்பேசில் நான் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டும் என விரும்பினேன். அதற்கான வாய்ப்பை ரஜினி சார் திரும்பவும் கொடுத்ததுக்கு நன்றி. மக்களுக்கான பிரச்னைகளை, மக்களைப் பற்றி நினைக்கிற, யோசிக்கிற, அவர்களுக்காக செய்ய வேண்டும் என நினைக்கிற ஒருவரை வைத்துக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதை கமர்ஷியலாக கொடுத்துள்ளேன். இந்த படத்தில் ரஜினியின் பவரைப் பார்க்கலாம். இந்த படத்தில் சமூக நீதி பற்றி பேசியிருக்கிறோம். மனித மாண்பை மீட்டெடுக்கும் படமாக இருக்கும். இந்தியாவில் 60 சதவீதம் பேர் நிலம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த அரசியலை காலாவில் நீங்கள் பார்க்கலாம்.’’ என்றார், ரஞ்சித்.

இரவு 8.40 மணி : இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசினார்.

இரவு 8.30 மணி : படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இரவு 7.45 மணி : இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குழுவினர் மேடையில் காலா பாடலை பாடினார்கள்.

இரவு 7.15 மணி : படத்தில் பணியாற்றிய டெக்னிஷியன்கள் மேடைக்கு அழைத்து பேச வைக்கப்பட்டனர்.

kaala -

காலா பாடல் வெளியீட்டு விழாவில் கூடிய ரசிகர்கள்.

மாலை 7.05 மணி : விழா நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார், ரஜினி.

மாலை 7.00 மணி : படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் வந்தார்.

மாலை 6.45 மணி : ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகனும் தயாரிப்பாளருமான தனுஷ் ஆகியோர் வந்து சேர்ந்தனர்.

மாலை 6 மணி : பெரும்பாலன இருக்கைகள் நிறைந்தது. ரஜினி ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக நிகழ்ச்சியை காண வந்த வண்ணம் உள்ளனர்.

×Close
×Close