காலா படம் ரிலீஸுக்கு முன்பாகவே தியேட்டர் உரிமை மற்றும் ஆடியோ ரிலீஸ் மூலமாக ரூ230 கோடி குவித்திருக்கிறது. ரஜினிகாந்த் மாஸ் நிகழ்த்திய ஜாலம் இது!
காலா... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம்! திரைத் துறை மற்றும் அரசியல் துறைகளில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் காலா, நாளை (ஜூன் 7) ரிலீஸ் ஆகிறது.
காலா, ரிலீஸுக்கு முன்பாகவே வசூலில் பட்டையைக் கிளப்பியிருக்கிறது. தியேட்டர் மற்றும் ஆடியோ உரிமை மூலமாக 230 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கும் காலா, பிளாக்பஸ்டர் எல்லையைத் தொட இன்னும் ரூ50 கோடியை மட்டுமே வசூல் செய்ய வேண்டியிருக்கிறது.
திரைத்துறை தகவல்கள் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் மட்டும் தியேட்டர்கள் உரிமை மூலமாக ரூ 60 கோடி வசூல் ஆகியிருக்கிறது. ஆந்திரா, நிஸாம் மண்டலங்களில் ரூ 33 கோடி, கேரளாவில் ரூ10 கோடி, இந்தியாவின் இதர மாநிலங்களில் ரூ7 கோடி, வெளிநாட்டு தியேட்டர் உரிமை ரூ45 கோடி, வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமை ரூ70 கோடி, ஆடியோ உரிமை ரூ5 கோடி என மொத்தம் ரூ 230 கோடி வசூல் ஆகிவிட்டதாக பட்டியல் இடுகிறார்கள்.
ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவான முந்தைய படமான கபாலி, ரிலீஸுக்கு முன்பு 218 கோடிகளை குவித்திருந்தது. அந்த வசூல் சாதனையை காலா முறியடித்துவிட்டது. காலா, மும்பையை அடிப்படையாக கொண்ட படம் என்பதால் பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
ராமாயணத்தில் இருந்து காலாவுக்கான கதைக் களத்திற்கான இன்ஸ்பிரேஷன் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரியர்-திராவிடர் யுத்தத்தை குறிப்பிடும் வகையில் காட்சிகள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘நகர்ப் பகுதி ஏழைகள் தொடர்ந்து தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். டெல்லியில் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளின்போது அதை பார்த்தோம். ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியின்போது குடிசைகளில் வசிக்கும் உழைக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். நகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் நடக்கும் இந்தக் கொடுமைகளை கேள்வி கேட்க வேண்டும். அதை காலா செய்கிறது’ என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பா.ரஞ்சித்.
ரஜினிகாந்துடன் ஹூமா குரேஷி, நானா படேகர் ஆகியோரும் தோன்றும் காலா, நாளை ரிலீஸுக்கு பிறகு இன்னும் அதிகமாக விவாதிக்கப்படும்.