Kaala Movie Review in Tamil : காலா விமர்சனம் - பல அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ரஜினி படம்!

Kaala Movie Review, Rating: 3.5/5. காலா படத்துக்கு ஐந்துக்கு 3.5 மதிப்பெண்கள் வழங்கலாம்.

ச.கோசல்ராம்

காலா படம் இன்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினி, ஹூமா குரேஷி, நானா படேகர், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி நடிக்க, பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இசை சந்தோஷ் நாராயணன்.

காலாவின் கதை : நெல்லை மாவட்டத்தில் இருந்து பிழைப்புத்தேடி மும்பை வருபவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவராக இருக்கிறார், வேங்கையன். அவரது மகன் காலா என்ற கரிகாலன் அவருக்கு துணையாக இருக்கிறான். அது தாராவியாக நிலை பெறுகிறது. தாராவி குப்பத்தை காலி செய்துவிட்டு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடுகிறார், நானா படேகர். அதற்கு வேங்கையன் குறுக்கே நிற்கிறார்.

காலாவும் சரினாவும் காதலிக்க, பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது நானா படேகர் ஆட்கள், வேங்கையனை கொன்று தாராவிக்கு தீ வைக்கிறார்கள். அந்த சம்பவத்தோடு மணப்பெண் குடும்ம்பத்தினர் நாசிக் சென்றுவிடுகிறார்கள். அப்பாவை கொன்றவர்களை வேட்டையாட களம் இறங்குகிறார், காலா. அவர் மனைவி அவரை அமைதிப்படுத்தி வைக்கிறார். இருந்தாலும் தாராவியின் காவல் தெய்வமாக திகழ்கிறார்.

மும்பை தேர்தலில், காலாவை எதிர்த்த ஆளும் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்படுகிறார். நானா படேகர் வீறு கொண்டு தானே களம் இறங்குகிறார். காலா குறிவைத்து நடத்திய தாக்குதலில், அவர் இறந்துவிட்டதாக நானா படேகர் நினைக்கிறார். தாராவியில் மீண்டும் அடுக்குமாடி கட்டிடம் கட்ட நினைக்கிறார். அது நடந்ததா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

வழக்கமாக மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரஜினி, இந்த படத்தில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுபவராக என்ட்ரி கொடுக்கிறார். அப்போது துணி துவைப்பவர்களை காலி செய்யச் சொல்லி ரவுடிகளுடன் வந்தவர்களை விரட்டி அடிக்கிறார்.

தாராவிக்கு காலாவைத் தேடி வரும் நானா படேகர், திரும்பி போக முயற்சிக்க, என் அனுமதியில்லாமல் நீ போக முடியாது என்று ரஜினி சொல்கிறார். அதை மீறி அவர் போக முயற்சிக்க, மொத்த பாதையையும் அடைத்து விடுகிறார்கள். அவர் ரஜினியிடம் வந்து அனுமதி கேட்ட பின்னரே, வழி கிடைக்கிறது. இந்த காட்சியில் ரஜினி ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்டரை அதிர வைக்கிறது.

முன்னாள் காதலியை தனியாக சந்திக்க செல்லும் போது, ரவுடிகள் அவரை சுற்றி வளைக்கும் காட்சி. தன்னை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றவனை கொன்றதுக்கு பழிக்கு பழி வாங்கும் காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்கு நல்ல தீனி. அதே போல போலீஸ் நிலையத்தில் அவர் செய்யும் கலாட்டா கலக்கல். மனைவி மகனை இழந்த பின்னரும், நானா படேகர் வீட்டுக்கு தனியாக சென்று சவால் விடும் காட்சியும் ரசிக்க வைக்கிறது.

முதல் பாதியில் காதலியுடனான சந்திப்பு, பழைய நிகழ்வுகள், மனைவியின் அன்பு, பாசம் என குடும்ப டிராமாவாக பா.ரஞ்சித் முத்திரை பதிக்கிறார். இரண்டாம் பாதியில் சவால், பழிவாங்குதல் என ரஜினியின் படமாக நகர்கிறது.

காலா பேசும் அரசியல் : 

காலா நில உரிமை அரசியல் பேசுவதாக வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், உள்ளுக்குள் பல்வேறு குறியீடுகளை கொண்டதாகவே இருக்கிறது. வில்லனை ராமனாகவும், ரஜினியை ராவணனாகவும் காட்டி ராவணனே ஜெயிச்சதாக காட்டுகிறார். வில்லனை ராமனாக காட்டியதன் மூலம், ரஜினியின் அரசியலுக்குப் பின்னால், பிஜேபி இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார், இயக்குநர் பா.ரஞ்சித். அதோடு க்ளைமாக்ஸ் காட்சியில் தாமிரபரணி சம்பவம், வாச்சாத்தி சம்பவம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட்டில் போராட்டக்காரர்கள் மத்தியில் விஷ கிருமிகள் ஊடுருவிய காட்சிகள் என சம கால அரசியலை எல்லாம் காட்சிகளாக வடிவமைத்து, தன்னுடைய படமாக்க ரஞ்சித் முயன்று இருக்கிறார்.

மகன்கள் தனிக்குடித்தனம் போக விரும்பும் போது, நான் செத்தாலும் இந்த மண்ணில்தான் என்று சொல்லும் போது யாருக்கோ பதில் சொல்வது போலிருக்கிறது. மகனுக்கு லெனின் என்று பெயர் வைத்து, அந்த கேரக்டர் மூலம், போலி போராளிகளை துகிலுறிப்பது பிரமாதம்.

படத்தில் குடும்பத்தினருடன் ரஜினி அதிகம் செலவிடும் காட்சிகள் அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் அதுவே படம் மெல்ல நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதை இயக்குநர் தவிர்த்து இருக்கலாம்.

காலா கலகலப்பு, செண்டிமெண்ட் தடவிய மசாலாப் படம்.

×Close
×Close