அமெரிக்காவில் அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் தமிழ் படம் 'காலா'!

324 தியேட்டர்களில் மட்டும் காலா தமிழில் ரிலீசாகிறது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் நாளை (ஜூன் 7) உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ‘எல்லாவற்றிற்கும் போராட்டம் கூடாது…. தூத்துக்குடி கலவரத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர்’ என்று ரஜினி தனது இரண்டு சொந்த கருத்துகளை தூத்துக்குடி சென்று மக்களை பார்த்தபின் முன் வைத்தார். ‘உண்மையான போராட்டக்காரர்களை ரஜினி எப்படி சமூக விரோதிகள் என்று சொல்லலாம்?’ என அரசியல் கட்சிகள் தங்கள் லாபத்திற்காக கூற, அதை அப்படியே பிடித்துக் கொண்ட சிலர், ‘ரஜினியின் காலா படத்தை பார்க்கமாட்டோம்.. அப்படம் வெற்றியடையக் கூடாது’ என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறர்கள். தினம் ரஜினிக்கு எதிராக பல்வேறு செய்தி சேனல்களில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், ரஜினி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, ரஜினியின் சொந்த மாநிலமான கர்நாடகாவில், ரஜினிகாந்த் தமிழ்நாட்டு ஆதரவாக செயல்படுகிறார். அவர் கன்னடர்களுக்கு எதிரானவர். எனவே அவரது படத்தை கர்நாடகத்தில் ரிலீசாக விட மாட்டோம் என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதற்காக, இன்று கர்நாடகாவில் போராட்டம் கூட நடக்கிறது. அவர்களுக்கு, தமிழகத்திலேயே ரஜினிக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை போலும்!.

தமிழகத்திலும் எதிர்ப்பு… கர்நாடகத்திலும் எதிர்ப்பு… இதுபற்றி ரஜினியிடம் கேட்டதற்கு, ‘நான் இன்னும் அதிக எதிர்ப்பை எதிர்பார்த்தேன் கண்ணா’ என்கிறார் சிரித்துக் கொண்டே. இந்தச் சூழ்நிலையில், ரிலீசுக்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகிய தயாரிப்பாளர் தனுஷ், படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும், அதற்கான பாதுகாப்பை கர்நாடக அரசு அளிக்க வேண்டும் என்ற பாசிட்டிவான தீர்ப்பைப் பெற்றார். இதனால், கர்நாடகாவில் நாளை காலா ரிலீசாக இருப்பது உறுதியாகியுள்ளது.

இருப்பினும், நேற்று பேட்டியளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, “கர்நாடகத்தில் காலா ரிலீசாவது நல்லதல்ல. அதையும் மீறி ரிலீஸ் செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை தயாரிப்பாளரே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழகத்தை பொறுத்தவரை காலா படத்திற்கான எதிர்பார்ப்பு குறைவாக இருப்பது உண்மை தான். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதுவே, 2.0 இப்போது ரிலீசாக இருந்தால், அதற்கான எதிர்பார்ப்பு இவ்வளவு குறைவாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான். ரஜினியின் மாஸ் அப்படியே தான் இருக்கிறது. ஆனால், பெரிதாக ஹிட்டாகாத பாடல்கள், படத்தில் ரஜினியைத் தவிர பெரும்பாலும் தமிழக ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயம் இல்லாத முகங்கள், கதைக் களத்தில் அழுத்தமாக இருக்கும் இயக்குனர் ரஞ்சித் மாஸ் ஏரியாவில் தேறுவாரா? போன்ற விஷயங்கள் சினிமா சார்ந்து காலா படத்தின் குறைவான எதிர்பார்ப்பிற்கான காரணம் எனலாம். மற்ற விதமான எதிர்ப்புகள் எல்லாம் முழுக்க முழுக்க அரசியலே. அது அனைவருக்கும் தெரியும்.

இதற்கு முன் எத்தனையோ படங்களுக்கு ரஜினி இதுபோன்ற எதிர்ப்புகளை சந்தித்து இருக்கிறார். ‘ரஜினி அவ்வளவுதான்’ என்ற வார்த்தைகள் ஆயிரம் முறை ஒலித்துவிட்டன. ஆனாலும், ரஜினி தான் இன்று வரை ‘சூப்பர்ஸ்டார்’.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான தியேட்டரில் ரிலீசாகிறது காலா. கடந்த 2016ம் ஆண்டு வெளியான கபாலி, அமெரிக்காவில் தமிழில் மட்டும் 237 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. தற்போது அங்கு 324 தியேட்டர்களில் மட்டும் காலா தமிழில் ரிலீசாகிறது. இதுதவிர தெலுகு, ஹிந்தியிலும் காலா அங்கு ரிலீசாகிறது. அமெரிக்காவில் ஒரு தமிழ் படம் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இதனால், அமெரிக்க வாழ் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அமெரிக்காவில் காலா இன்று ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close