கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என் ஜி கே' படத்தில் நடித்து வருகிறார். பல நாட்களாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இடையில், சில காலம் செல்வராகவனின் உடல்நிலை காரணமாக ஷூட்டிங் தடைபட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், சூர்யா தனது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மல்லுவுட் ஸ்டார் மோகன்லால், ஆர்யா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் கே.வி.ஆனந்த், மீட்பான், உயிர்கா என்ற சில ஆப்ஷன்களை கொடுத்து, இதில் எந்த டைட்டில் வைக்கலாம்? என ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 12.10 மணிக்கு படத்திற்கு 'காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்தது. அத்துடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது. இதில் சூர்யா, கோட் சூட்டுடன் கையில் துப்பாக்கி வைத்தபடி ஸ்டைலாக தோற்றமளிக்கிறார்.
அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாகும் இப்படத்திற்கு பட்டுகோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.