Kaappaan Tamil Movie: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், புதுப்படங்களை ரிலீஸ் தினத்தன்றே தனது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடுவது புதிய விஷயமல்ல. ரஜினிகாந்தின் பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
Advertisment
புதிய படங்களை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட தடை கேட்டு பல்வேறு பட நிறுவனங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தும், இந்தப் பிரச்னைக்கு முடிவு கிடைக்கவில்லை. தொடர்ந்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல படங்களையும் ஆன்லைனில் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது.
இந்தச் சூழலில் இன்று (செப்டம்பர் 20) சூர்யா, சாயிஷா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களை இந்தப் படத்திற்கு பல்வேறு தரப்பினரும் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் சூரியாவின் கேரியரில் முக்கிய திருப்பத்தை உருவாக்கும் என சிலர் கருத்து கூறியிருக்கிறார்கள்.
எனினும் இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸில் இருந்து பாதுகாப்பது படக் குழுவினரின் முக்கியமான நோக்கம். இதற்கிடையே இன்று காப்பானை குறிவைத்து, அதன் ஆடியோவை புதிதாக தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
காப்பான் முழுப் படத்திற்குமான மிரட்டல் முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது. அவ்வப்போது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு, புதுப் படங்களை ரிலீஸ் செய்து வரும் தமிழ் ராக்கர்ஸுக்கு கடிவாளம் போட முடியாமல் தமிழ் சினிமா உலகம் திணறி வருகிறது.