மி டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறப்பட்டது, அவரது பெருமையை அழுக்குப்படுத்தும் முயற்சி என அவரின் இளைய மகன் கபிலன் வைரமுத்து கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஆதாரமும் தொலைநோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண் பெண்ணின் மீதும், பெண் ஆணின் மீதும், பழி சொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது என தெரிவித்துள்ளார்.
கபிலன் வைரமுத்து அறிக்கை
மி டூ விவகாரம் என்ற இந்த உலகளாவிய அமைப்பு எதை நோக்கியது, அது எங்கே திசை மாறுகிறது என தீர்க்கமாக சொல்லும் பக்குவம் தனக்கில்லை என்றாலும், பெண்ணுரிமைக்காக நம் முன்னோடி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், அவர்களின் கருத்தியலும், இதுபோன்ற அமைப்புகளை புரிந்துகொள்ள நமக்கு உதவுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கவிஞர் வைரமுத்துவின் பெருமைகளை அழுக்கப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என்றும் கபிலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
October 2018
தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள், அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், அது எப்படியும் இருக்கட்டும், அவை சட்ட ரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் என்றும் கபிலன் கூறியுள்ளார்.
இந்த பிரச்னையை ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்காக சித்தரித்து, நாட்டில் நிகழும் வேறு பல பிரச்னைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு, யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் கபிலன் வைரமுத்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.