Kadaram Kondan Movie Review: நடிகர் விக்ரமின் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருக்கிறார். நடிகர் கமல் ஹாசன் தனது ராஜ் கமல் ஃப்லிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இதனை தயாரித்திருக்கிறார். இதற்கு முன் கமலின் படங்களை மட்டுமே தயாரித்து வந்த இந்நிறுவனம் முதன்முறையாக, வேறொரு நடிகரின் படத்தைத் தயாரித்துள்ளது.
விக்ரமுடன் இணைந்து அக்ஷரா ஹாசன், அபி ஹாசன், லேனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரி படத்துக்குள் போவோம்...
காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டாரின் ஆதரவில்லாமல் மலேசியாவில் வசிக்கும் இளம் தம்பதி வாசு (அபி) - ஆதிரா (அக்ஷரா). கர்ப்பமாக இருக்கும் ஆதிரா மீது அலாதியான அன்பை பொழியும் வாசு ஒரு மருத்துவர். அவர் பணிபுரியும் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகிறார் விபத்தில் காயமுற்ற கே.கே. மருத்துவமனையில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி நடக்கும்போது, அவரின் பின்னணி தெரிய வருகிறது. அந்த கொலைமுயற்சியில் அவரை காப்பாற்றும் வாசு, மிகப்பெரிய பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார். இதைத் தொடர்ந்து வாசுவின் காதல் மனைவி ஆதிராவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. கே.கே. யார், அவரை யார், ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள், வாசுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன, ஆதிரா காப்பாற்றப்பட்டாரா என்பதே 'கடாரம் கொண்டான்'.
Kadaram Kondan Movie Review and Ratings
படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை வேகத்தால் தடதடக்கிறது திரையரங்கு. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக காட்சி தருகிறார் விக்ரம். ஆனால் அவருக்கான வசனங்கள் கை விட்டு எண்ணுமளவு இருப்பது, பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நாடு முழுவதும் தீவிரமாக தேடப்படும் குற்ரவாளிகள் போலீஸ் அலுவலகத்தில் நுழைந்து அடித்து துவம்சம் பண்ணுவது எல்லாம் ஆர்ட்டிஃபீஷியலாக உள்ளது.
அதே போன்று சாதாரண ஜூனியர் டாக்டர் மனைவியைக் காப்பாற்ற, காவல்துறை கண்கானிப்பில் மயக்கத்தில் இருக்கும் ஒருவரை வெளியில் கொண்டு வந்து ஒப்படைக்க ஒத்துக் கொள்வாரா என்ற கேல்வியையும் தவிர்க்க முடியவில்லை.
இருமுகன், ஸ்கெட்ச், சாமி 2 என அடுத்தடுத்து இறங்கு முகத்தை சந்தித்த விக்ரமை, தூக்கி நிறுத்தியிருக்கிறது ‘கடாரம் கொண்டான்’. ஆனால் இன்னும் நிறைய ஸ்கிரீன் ஸ்பேசும், வசனங்களும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், ரசிகர்களுக்கு திருப்தியையும், முழுமையும் கொடுத்திருக்கும்.
நாசரின் மகன் அபி ஹாசனுக்கு இது நல்ல அறிமுகம். மனைவியை காப்பாற்ற துடிக்கும் காட்சிகளில் பதற்றத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அக்ஷரா கொஞ்ச நேரமே படத்தில் வந்தாலும், மனதில் பதிகிறார்.
படத்தின் மற்றொரு பலம், ஜிப்ரானின் இசையும் பின்னணி இசையும். சில இடங்களில் வசனங்களை மிஞ்சும் அளவுக்கு இசை இருப்பது சற்று எரிச்சலூட்டுகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக ரிலீஸான படங்கள் அத்தனையும் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்து வந்த நிலையில், அந்தக் குறையை ’கடாரம் கொண்டான்’ போக்கியிருக்கிறது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.