kadri gopalnath death news : பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. கத்ரி கோபால்நாத்தின் மறைவு இசைத்துறையினரை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Advertisment
கர்நாடக கலாஸ்ரீ, பத்மஸ்ரீ, கலைமாமணி, சாக்ஸபோன் சாம்ராட், நாத கலாநிதி, சங்கீத வாத்திய ரத்னா, சங்கீத கலாசிகாமணி போன்ற பல்வேறு விருதுகளைக் குவித்து, இசைத்துறையில் மிகப் பெரிய சாதனைகளை செய்தவர் கத்ரி கோபால்நாத்.
69 வயதான இவர், மங்களூரில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலைக் குறைப்பாட்டால் அவதிப்பட்டு வந்த கத்ரி கோபால்நாத் சமீபத்தில் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்தது.
கர்நாடகா மாநிலம் பந்த்வால் அருகே உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் மாபெரும் உச்சத்தை தொட்டவர் கத்ரி கோபால்நாத்.இவரின் குரு கலாநிகேதனாவை சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயர். அவரைத் தொடர்ந்து மிருதங்க இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசை பயிற்சி பெற்றிருக்கிறார் கத்ரி கோபால்நாத்.
Advertisment
Advertisements
இவரின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு 2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டமும், தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கியும் பெருமைப்படுத்தியது. சாக்ஸபோன் இசையில் கைதேர்ந்த வித்தகரான கத்ரி கோபால்நாத் ஏ.ஆர் ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய டூயட் படம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படைப்புகளில் ஒன்று.
இவரின் மறைவு இசைத்துறையை சேர்ந்தவர்களை மட்டுமில்லை ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கத்ரி கோபால்நாத்தின் இறுதி சடங்குகள் கர்நாடகாவின் பாதவிங்கடி என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. கத்ரி கோபால்நாத்தின் 2 ஆவது மகன் மணிகந்த் கத்ரி-யும் இசையமைப்பாளர் ஆவர்.