சுபகீர்த்தனா
2.0 படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கி போகிறார் என்பது தான் இன்றைய சூடான செய்தி.
இயக்குநர் சங்கரின் கனவு பிராஜெக்டுகளில் ஒன்று இந்தியன் 2. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்க இருக்கிறார் என்று பல தகவல்கள் வலம் வந்தாலும், இப்போது அதே படத்தில் நடிக்க இருப்பதாக உறுதி செய்துள்ளார் காஜல் அகர்வால்.
தெலுங்கு திரைப்படம் கவசம் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய காஜல், “அடுத்ததாக கமல் சாருடன் ஒரு படம் நடிக்க போகிறேன். அவருடன் இணைந்து நடிக்க இருக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்” என்று ஆவலுடன் தெரிவித்தார்.
உலக நாயகன் கமல் பிறந்தநாளன்று, லைகா நிருவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், 1996ம் ஆண்டு பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்த இந்தியன் படத்தின் பாகம் 2 உருவாக உள்ளது என்றும், இப்படத்தில் மீண்டும் கூட்டணி போடுகிறார்கள் சங்கர் - கமல் ஹாசன் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியன் 2 அப்டேட்
சில தகவல் வட்டாரங்கள், இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் என்றும், இதற்காக ஃபோட்டோ ஷூட் அனைத்தும் கமல் ஹாசனை வைத்து நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலை சேனாதிபதி கதாப்பாத்திரத்தில் பார்த்து இயக்குநர் சங்கர் மகிழ்ச்சியில் உரைந்து போனதாகவும் தெரிவித்தனர். அதுவும், கமல் வைத்திருக்கும் முறுக்கு மீசை எல்லாம் ஷேவ் செய்து அப்படியே சேனாதிபதி போல் மாறியுள்ளாராம்.
இப்படத்தின் ஷூட்டிங் துவங்க அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. கலை இயக்குநர் முத்துராஜ் படத்திற்கான செட் அமைக்கும் வேலைகளை துவக்கி விட்டார். இப்படத்திற்கான ஷூட்டிங் செட்கள் சென்னையிலேயே அமைக்கப்படுகிறது. இதை தவிற, ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா மற்றும் தாய்லாந்து நாட்டிலும் ஷூட்டிங் நடக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தியன் - 2 படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்க மற்றும் ஒளிப்பதிவு வேலைகளை பாலிவுட் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மேற்கொள்கிறார். மேலும் முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்த நெடுமுடி வேணு இப்படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் துல்கர் சல்மானும் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தான் காஜல் அகர்வாலை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வர காத்திருப்பதாகவும் காஜல் தெரிவித்தார். மேலும் இதே படத்தில் சிம்புவும் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வேகமாக பரவி வந்தது. இருப்பினும் இது உண்மை இல்லை என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் இயக்குநர் சங்கர் கூறுகையில், “இந்தியன் - 2 படத்தை நான் கடமைக்காக எடுக்கவில்லை. இத்தனை வருடங்களில் என்னென்னவோ நடந்துவிட்டது, அதெல்லாம் இப்படத்தில் பார்க்க முடியும். இதுவரை பல படங்களை இயக்கி இருந்தாலும், இந்தியன் - 2 தான் எனது ஃபேவரைட். ஒவ்வொரு முறையும் ஒரு படத்தை முடிக்கும்போதெல்லாம் இந்தியன் பாகம் 2 எடுக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும், இறுதியாக அது இப்போது பலித்துவிட்டது.” என்று பெருமிதம் கொண்டார்.