முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டில், அவரது சாதனைகளைக் கொண்டாடும் ‘கலைஞர் 100’ விழா திரைத் துறை சார்பில், சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, நயன்தாரா உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், கலந்துகொண்ட நிலையில், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விழாவுக்கு வராதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கலைஞர் 100 விழாவுக்கு வந்தவர்கள் - வராதவர்கள் யார் என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்த படம் என்றால் அது கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதி சிவாஜி நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் என்றால் அது மிகையல்ல. கருணாநிதி பல படங்களுக்கு கதை வசனம் திரைக்கதை எழுதியுள்ளார். தமிழ் திரையுலகுடன் நல்ல நட்புடன் இருந்தார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருடன் நல்ல நட்பில் இருந்தார்.
கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால், கலைஞர் கருணாநிதியின், சாதனைகளைக் கொண்டாடும் விதமாக திரைத் துறை சார்பில், ‘கலைஞர் 100’ விழா சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் சனிக்கிழமை நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூரியா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், வடிவேலு, அருண் விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களும், நடிகை நயன்தாரா, நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா, இயக்குநர்கள் ஷங்கர், பா. இரஞ்சித், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், “கலைஞர் ஒருபோதும் ஆடம்பரத்தை விரும்பியதில்லை. கலைஞர் பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுதி வாங்கிய சம்பளத்தின் மூலம் 1955-ம் ஆண்டு கோபாலபுரம் வீட்டை வாங்கியதாகவும் கடைசி வரை அதே வீட்டில் வசித்தார்” என்று கூறினார்.
‘கலைஞர் 100’ விழாவில் பேசிய நடிகரும் மக்கல் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், கலைஞர் கருணாநிதி தனது வசனங்களால், சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகிய இரு ஆளுமைகளையும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக மாற்றியவர் என்று புகழாரம் சூட்டினார்.
நடிகர் சூரியா விழாவில் பேசுகையில், “கலைஞரைப் பார்த்திருக்கிறேன் என்பதே தனக்கு பெருமை” என்று கூறினார்.
அதே போல, நடிகர் தனுஷ், கலைஞர் உடனான சந்திப்பு பற்றிய நினைவை பகிர்ந்துகொண்டார். கலைஞர் தன்னைப் பார்த்த உடன் தன்னை ‘வாங்க மன்மதராசா’ என்று அழைத்தார் என்பதை நகைச்சுவையுடன் நினைவு கூர்ந்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூரியா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நயன்தாரா, ரோஜா உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துகொள்ளாதது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் 100 விழாவில், கலந்துகொள்ளாத விஜய், அஜித்துக்கு என்ன ஆச்சு என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல, கலைஞர் 100 விழாவுக்கு வந்தவர்கள் யார், வராதவர்கள் யார் என்று நெட்டிசன்கள் பட்டியல் போட்டும் வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.