இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் நேற்று (ஆகஸ்ட் 12) மாலை நடைபெற இருந்தது. சென்னை மட்டுமல்லாது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரசிகர்கள் இசை நிகழ்ச்சிக்கு புக் செய்து வந்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் திடீர் மழை காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னையில் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு ட்விட்டரில் ரசிகர்களிடையே வருத்தம் தெரிவித்த ரஹ்மான், வேறு ஒரு தேதியில் இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்றும் கூறியுருந்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்று வைத்தார். அதில், அரசின் உதவியுடன்.. கலை, மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச அனுபவங்களுக்கான அடுத்த கட்ட உள்கட்டமைப்பை சென்னையில் உருவாக்குவோம் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
ஏ. ஆர். ரஹ்மானின் இந்தப் பதிவுக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "சென்னையின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பெரிய இசை கச்சேரிகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு ஏதுவாக கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் உலக தரத்தில் அமையவுள்ளது.
ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் இடங்கள் உள்ளிட்டவற்றுடன் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் சென்னை நகரத்தின் புதிய கலாச்சார அடையாளமாக இருக்கும்!" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் சென்னையில் அமைக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“