தெறிக்கும் வசனங்களுக்கு சொந்தக்காரர்: தமிழ் சினிமாவில் கலைஞர் கருணாநிதி!

மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் மார்டன் தியேட்டர்ஸ் கம்பெனியில் வசனகர்த்தாவாக அமர்த்தப்பட்டார் கலைஞர்!

By: June 2, 2020, 6:06:24 PM

Kalaignar Karunanidhi: முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை வெறும் அரசியல்வாதி என்று மட்டும் கூறிவிட முடியாது. எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என சொல்லிக் கொண்டே போகலாம்.

சரித்திரம் ஆன சாதனை நாயகன்… வரலாறு பேசும் கருணாநிதியின் மேடைப் பேச்சு!

தனது 20-வது வயதில் 1947ம் ஆண்டு ‘ராஜகுமாரி’ திரைப்படத்தின் வாயிலாகக் கலைத் துறைக்குள் கால் தடம் பதித்தார்! ‘ராஜகுமாரி’யில் கலைஞருக்கு ‘வசன உதவியாளர்’ வேலைதான் முதலில் தரப்பட்டது. அவருக்குள் புதைந்து கிடந்த இலக்கியத் தமிழால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் சாமி, படத்தின் முழுவசனத்தையும் எழுதும் பொறுப்பை கலைஞரிடமே தந்தார். அதுவே அவரது வசன வாசலுக்கான திறவுகோலாக அமைந்தது. படத்தில் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சும்; கலைஞரின் வசன வீச்சுமாக மனதில் நின்றது.

ராஜகுமாரியின் வெற்றியைத் தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் ‘அபிமன்யூ’ என்கிற புதிய படத்தை ஆரம்பித்தது. அதிலும் எம்.ஜி.ஆர்தான் ஹீரோ, வசனம் எழுதும் பொறுப்பு கலைஞருக்கு வழங்கப்பட்டது. இயக்குனர், ஏ.எஸ்.ஏ.சாமியேதான்! அந்தப் புராண கதைக்கு புதிய கோணத்தில் இலக்கிய நயத்தோடு வசன மழை பொழிந்தார் கலைஞர். இருப்பினும் இந்த இரு படங்களிலும் கலைஞரின் வசனத்தை இருட்டடிப்பு செய்திருந்தார்கள்.

பின்னர் மார்டன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாட்டு எழுதும் ஆஸ்தான கவிஞராக இருந்த கவிஞர் கா.மு.ஷெரிப் மூலம் கலைஞரின் எழுத்து வன்மையை அறிந்த மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், கலைஞருக்கு அழைப்பு விடுத்தார்! அதன்படி திருவாரூர் சென்ற கவிஞர் கா.மு.ஷெரீப், கலைஞரை அழைத்து வந்து டி.ஆர்.சுந்தரம் முன் நிறுத்தினார்.

கலைஞரின் கை வண்ணத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ நாடகத்தின் சிறப்பை அறிந்த டி.ஆர்.சுந்தரம், அந்தக் கதையை அதே பெயரிலேயே படமாக எடுக்க முடிவு செய்தார். அப்போது மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் மார்டன் தியேட்டர்ஸ் கம்பெனியில் வசனகர்த்தாவாக அமர்த்தப்பட்டார் கலைஞர்! அதிகாரப்பூர்வமாக தன்னை அடையாளம் காட்டப்போகும் முதல் வாய்ப்பு என்பதால் கலைஞர் தன் முழு ஆற்றலையும் தேக்கி கதை – வசனம் வடித்திருந்தார். ‘சுளீர்’ வசனங்கள், அப்போதைய அரசியல் தலைவர்களைச் சுட்டது! ஆகவே, ‘மந்திரிகுமாரி’ பட வசனங்களை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்!

தமிழில் ஐம்பெரும் காப்பியமான ‘குண்டலகேசி’யைத் தழுவித்தான் ‘மந்திரிகுமாரி’ கதையை உருவாக்கியிருந்தார் கலைஞர். ‘வேலைக்காரி’யில் அறிஞர் அண்ணா பகுத்தறிவு பிரச்சாரம் செய்ததைப் போல, அவரது சிஷ்யரான கலைஞர், ’மந்திரிகுமாரி’யில் நம்பியார் ஏற்று நடித்த ராஜகுரு கதாபாத்திரம் வாயிலாக படு சாதுர்யமாக பகுத்தறிவு கொள்கையைப் பரப்பினார்!

‘மந்திரிகுமாரி’ பட வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர் – கலைஞர் கூட்டணியில் வந்த ‘மருதநாட்டு இளவரசி’ படமும் பயங்கர ஹிட்டானது. ஒரே வருடத்தில் ‘மருத நாட்டு இளவரசி, ‘மந்திரிகுமாரி’ எனத் தொடர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் நட்சத்திர எழுத்தாளராக மாறினார்.

‘பராசக்தி’யில் சிவாஜிகணேசன் ஹீரோ என முடிவானதும்; வசனம் எழுத ‘ரத்தக் கண்ணீர்’ புகழ் திருவாரூர் தங்கராசுவையும், இயக்குனராக ஏ.எஸ்.ஏ.சாமியையும் தயாரிப்பாளர்கள் நியமித்தனர்! சிவாஜி திருச்சியிலிருந்து சென்னை வந்து பார்த்தபோது, வசன கர்த்தாவாக கலைஞரும், இயக்குநரும் கிருஷ்ணன் பஞ்சுவும் மாறியிருந்தார்கள்.

மதத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளை கொளுத்திப் போட்டு, பகுத்தறிவு தீபம் ஏற்றிய ‘பராசக்தி’யில் கலைஞரின் நெருப்பு வசனங்களை, சிவாஜி கணேசன் வெகு சிறப்பாக பேசினார். குறிப்பாக நீதி மன்ற காட்சியில், அவர் பேசியது, உணர்ச்சிப் பிரவாகமாக பொங்கி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது! கலைஞரின் வசனத்தில் ‘அனல்’ தெறித்தது! ‘வசனப் புரட்சி’ செய்த கலைஞருக்கு தமிழ் திரையுலகம் தனி சிம்மாசனம் தந்தது. ‘பராசக்தி’ மாதிரி சமுதாய விழிப்புணர்வுக் கதைகளை அழகுத் தமிழில் அடுக்குமொழி வசனத்தோடு சொன்னால் தான் படம் ஓடும்!’ என்கிற ட்ரெண்டை அந்தப்படம் உருவாக்கித் தந்தது.

தமிழ் சினிமாவை நல்ல பாதைக்கு திருப்பிவிட்ட ‘பராசக்தி’ படத்தின் மூலமாக சிவாஜிகணேசனும், கலைஞரும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்கள். சிவாஜிக்கு நிறைய புதுப் படங்கள் ஒப்பந்தமாகின! ‘கலைஞர் எழுதினாலே அந்தப் படத்துக்கு வெற்றி உறுதி!’ என திரையுலகத்தில் பேச்சு எழுந்தது.

இசைஞானி பிறந்தநாள்: யூ-ட்யூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்கள்!

இன்றுவரை தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தில் பராசக்தியும், அதன் வசனகர்த்தா கலைஞர் கருணாநிதியும் இடம்பெற்றிருக்கிறார்கள். புதிதாக நடிக்க வருபவர்கள் பாராசக்தியின் வசனத்தை பேசிக்காட்டி, நடிப்பு வாய்ப்பு கேட்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. அழகு தமிழில், சொல்ல வரும் விஷயங்களில் சமரசம் செய்துக் கொள்ளாத அவரது எழுத்து நடை இன்றும் பல திரைத்துறை பிரபலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kalaignar karunanidhi birthday his writings in tamil cinema

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X