கலைஞர் நூற்றாண்டை ஒட்டி முரசொலி இதழில் ‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்’ என்ற தலைப்பில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், ‘கலைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன் மற்றும். எம்.ஜி.ஆர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கலை ஞர்.
நான் 1980-ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். அதன் தயாரிப்பாளர், கருணாநிதியின் நண்பர். படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன், என்னிடம் வந்த தயாரிப்பாளர், ‘நான் உங்களுக்கு மகிழ்ச்சியான விசயத்தை சொல்கிறேன், கருணாநிதி நம் படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொண்டார்’ என்று கூறினார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
எளிய வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான், கருணாநிதி வசனத்தை பேசி நடிப்பதா? நடக்காத காரியம், நான் முடியவே முடியாது என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டேன்.
இதை கேட்டு தயாரிப்பாளருக்கு இடி விழுந்தது போல் ஆகிவிட்டது.
/indian-express-tamil/media/media_files/kI6ht39ScdwpjLBV20jA.jpg)
உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளுங்கள், அவர் சம்மதித்த பிறகு, நான் எப்படி மறுக்க முடியும்? என்று தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார். அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன், என்று கூறினேன். வேண்டா வெறுப்பாக அவரும் ஒப்புக் கொண்டார்.
கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தேன். தமிழ்நாட்டிற்கே தெரிந்த லட்சணமான வீடு. ஒருவர் மட்டும் செல்லக் கூடிய படிக்கட்டு வழியே, அவருடைய உதவியாளர் சண்முகநாதன் என்னை அழைத்துச் சென்றார்.
கலைஞர் என்னைப் பார்த்ததும் ‘வாங்க வாங்க..’ என்று அவருக்கே சொந்தமான கரகரப்பு குரலில் அழைத்து நலம் விசாரித்தார்.
‘கதை கேட்டேன்.. நன்றாக இருந்தது, சிறப்பாக வசனம் எழுதிடலாம்’ என்றார். ‘சார், உங்கள் வசனங்களை என்னால் பேச முடியாது, எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். உங்கள் வசனத்தை எப்படி என்னால் பேச முடியும்? தவறாக நினைக்க வேண்டாம்’ என்று அவரிடம் கூறினேன்.
அவர் சிரித்துக் கொண்டு, ‘எனக்கு யாருக்கு எப்படி எழுத வேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு, எம்ஜிஆர்.,க்கு எழுதியது போல எழுதமாட்டேன். உங்கள் படங்களை பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுகிறேன்’ என்று சாதாரணமாக கூறினார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
திடீரென ஒரு யோசனை தோன்றியது, ‘சார் படப்பிடிப்பில் சில வசனங்களை நாங்களே மாத்துவோம், உங்கள் வசனத்தை நீக்கவும், மாத்தவும் முடியாது’ என வேறு வழியில் அவரை சமாளிப்பதாக நினைத்து கூறினேன். ‘மாற்றங்கள் ஒன்றும் தவறில்லை, அது என்ன திருக்குறளா?’ என்று அவர் கூறினார். அந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.
நான் அமைதியாக இருந்தேன், அதை புரிந்துகொண்ட கருணாநிதி, ‘முன்னால் யார் வசனம் எழுதினாரோ, அவரை எழுதட்டும், நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன்.. என்று கூறிவிட்டார்.
அதன் பின் தயாரிப்பாளரை உதவியாளர் மூலம் அழைத்த கருணாநிதி, ‘ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேலைகள் நிறைய இருக்கிறது. ஆகையால் என்னால் இந்த படத்திற்கு வசனம் எழுத முடியாது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்,’ என்று கூறி தயாரிப்பாளரை அனுப்பிவைத்தார்..
பிறகு என்னைப் பார்த்த கருணாநிதி, ‘திருப்தியா?’ என்று கேட்டார். தயாரிப்பாளரை புண்படுத்தாமல், என்னையும் திருப்தியபடுத்திய அவருடைய செய்கை, எனக்கு மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரித்தது.
ஆனால், அவர் வசனத்தில் நடித்திருக்கலாமே, தவறு செய்துவிட்டோமே என்ற குற்றஉணர்ச்சியும் இன்றும் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது, இப்படி பல கலைஞர் உடனான பல நினைவுகளை ரஜினிகாந்த் அந்த கட்டுரையில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“