ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் தற்போது காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண் இயக்குனராக ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரன் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வரும் நிலையில், தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர்.
கமல்ஹாசன், காஜல்அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் தற்போது புதிதாக இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். தைவானில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதன் செட்டில் காளிதாஸ் ஜெயராமுடன் இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதுவரை 16 படங்களில் நடித்துள்ள காளிதாஸ், ஏற்கனவே கமலுடன் மீன் குழம்பும் மண் பணையும் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்தியன் 2 படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் 3-வது முறையாக காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். பஞ்சதந்திரம், உத்தம வில்லன், தெனாலி, சாணக்கியன் போன்ற பல படங்களில் ஜெயராமும் கமலும் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது அவரது மகனும் அதை பின்பற்றி வருகிறார்.
இந்தியன் 2 நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான விபத்தில் மூன்று பேர் பலியான நிலையில் மற்றும் பலர் காயமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அதன்பிறகு வந்த கொரோனா தொற்று காரணமாகவும் படப்பிடிப்பு தாமதமானது. விக்ரமின் வெற்றிக்குப் பிறகு, கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கினார், மேலும் இந்த படத்தில் நடித்து வந்த விவேக் மரணமடைந்ததால், கதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“