Kamal Haasan – A.R.Rahman: நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற தலைப்பில் நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இதே தலைப்பில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் கலந்துரையாடினார்கள். அப்போது விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அந்த உரையாடல் சமூகவலைதளத்தில் வைரலானது. அதே போன்று நேற்று நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசனும், ரஹ்மானும் அவர்களுடைய பார்வையில் பதிலளித்தார்கள். இந்தக் கலந்துரையாடல் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. அவர்கள் பேசியதிலிருந்து சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
அதில் பேசிய கமல், “ஊரே கொண்டாடியதற்கு பிறகுதான் நான் ஏ.ஆர். ரஹ்மானை கவனித்தேன். அவருடைய பாடல்களை அதுவரையில் நான் கேட்கவே இல்லை. ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலுள்ள பாடல்கள் மிகச்சிறந்த பாடல்களாக இருக்கும். ஓர் இயக்குநராக ரஹ்மானுடன் வேலை செய்வது மிகவும் சுலபம்.
ஹேராம் படம் எடுத்த போது சினிமாகாரர்கள் எல்லோரும் ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டாங்க. பணம் வந்ததும் இப்படி ஒரு படம் எடுப்பேன்னு என் நண்பர்கள்கிட்ட சொல்லியிருந்தேன். என் ஆசை இதுதான். அதனால தான் ஹேராம் எடுத்தேன். ரஹ்மான் வீட்டில் அவர் பயன்படுத்திய பழைய கருவிகள் எல்லாம் அவருடைய வீட்டு சுவற்றில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நமக்கு ஏன் இப்படி தோணவில்லை என எனக்குத் தோன்றியது.
பல பரிமாணங்கள் இல்லாதவர்கள் நிச்சயம் கலைஞர்களாக இருக்க முடியாது. ரஹ்மான் பள்ளிப் படிப்பை கூட முடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவரிடம் ஒரு விதமான அமைதி இருக்கும். சிலர் சின்ன வயசுலேயே அட்வைஸ் சொல்ற அளவிற்கு இருப்பாங்க. அப்படிப்பட்டவர்தான் ரஹ்மான்.
வந்தே மாதரம் பாடலைப் போன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பாட வேண்டும் என ஓராண்டுக்கு முன்பே ஏ.ஆர் ரஹ்மானிடம் சொல்லிவிட்டேன். யானைக்கு அன்னாசிப்பழம் போல கொடுத்தது போல ஆகிவிடக் கூடாது. எதையுமே வலியுறுத்தக் கூடாது. எனக்குத் தோன்றியது போல் அவருக்கும் தோன்ற வேண்டும்.
சிவாஜி,எம்.ஜி.ஆர் ஆகியோர் செய்த திரைப்படங்களை கேலி செய்வது, குறை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அதுவும் இந்த டிஜிட்டல் உலகில் அந்தப் படங்களைப் பல முறைப் போட்டுப் பார்த்து ஆயிரம் குறைகளை சொல்லலாம். ஆனால் அவர்கள் இருந்த சூழலைப் புரிந்து கொண்டு, அவர்கள் ஏறி வந்த படியின் அடுத்த படியில் தான் நாம் இருக்கிறோம் என்று புரிந்தால் அந்த தொடர்ச்சி புரியும்.
அவர்கள் பயணத்தின் தொடரும் பகுதி நாங்கள் தான். சிவாஜி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது இயல்பாகச் சொன்னார், “நான் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்” என்று.
அதற்கு நான், “எந்தக் கலைஞனுக்கும் ஒத்திக்கை பார்ப்பதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது. அதை அடுத்த தலைமுறை தான் அரங்கேற்றுவார்கள்” என்றேன். அன்றாடக் கூலிக்காக நாம் செய்யும் வேலைகள் கணக்கில் வராது. அந்த வேலைகளைத் தாண்டி யோசிக்கும் போது, கற்பனை செய்யும் போது அதை முடிக்க உங்கள் வாழ்நாள் போதாமல் இருக்கலாம். அந்த அறிவை நீங்கள் அடுத்த தலைமுறைக்குத் தரும்போது அது முடிக்கப்படும். உங்கள் கனவுகள் நிறைவேறும். அது உங்கள் மூலமாக நடக்காமல் போகலாம். எனவே தலைமுறைகளுக்கு இடையேயான உரையாடல் முக்கியம்.
என் நண்பர் தசரதன் என்று ஒருவர் இருந்தார். மிகத் திறமைசாலி. இயக்குநர் சங்கரைப் போலப் பெரிய அளவு வளர்ந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரது சூழல், அதன் ஏழ்மையிலிருந்து அவரால் தப்பி வர முடியவில்லை. இப்படி எவ்வளவு குழந்தைகள் வீணாகிறார்களோ என்று தெரியவில்லை” என்றார்.
https://t.co/p4Hiwexus6
— Kamal Haasan (@ikamalhaasan) June 12, 2020
நேரலையில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “பத்து வருஷம் கழிச்சுஆரம்பிக்க வேண்டியதெல்லாம் அப்பா இறந்த காரணத்தினால் எனக்கு பத்து வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சிடுச்சு. பல இடங்களில் வாசிக்க ஆரம்பித்தேன். மணிரத்னம் வந்த போது எல்லாமே நடந்தது. ‘படைப்பு சமரசம்’ என்பது நிச்சயம் இருக்க வேண்டும்.
கமல்ஹாசனும், நானும் பத்து நாட்கள் சந்தித்திருப்போம். சினிமாத்துறை சார்ந்த பல பிரபலங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களை கலந்துரையாடியிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் சமமானவர்கள். சமமான மரியாதை கொடுக்க வேண்டும். பெண்கள் ஆளைப் பார்த்தே அவர்கள் எப்படி என சொல்லிவிடுவார்கள்.
பயணம் மேற்கொள்ளாமல் வாழ்க்கையை உணரவே முடியாது. ஒவ்வொருத்தருடைய பார்வையும் வேறு. நான் உலகத்தைப் பார்க்கிற பார்வையும் வேறு. தற்போது அமெரிக்காவில் என்ன நடக்கிறது? அடக்குமுறை நடந்து கொண்டிருக்கிறது. 300 வருடமாக எவ்வளவு போராடினாலும் அது மறுபடியும் வேறு மாதிரியாக வந்து கொண்டிருக்கிறது. பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. இவ்வளவு முன்னோக்கி வளர்ந்த நாடு மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே செல்லும்போது இந்த மாதிரி விஷயங்கள் தான் தூண்டுதலாக இருந்தது. அங்கு அப்படியென்றால், இங்கு வட இந்தியன், தென்னிந்தியன், தமிழன், தமிழன் அல்லாதவன், இப்படி பல பிரிவினைகளுடன் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அது கூடாது. தற்போது இருக்கும் சூழலில் மொழிகள் தாண்டி, தேசம் தாண்டி சிந்திக்க வேண்டும்.
ஒரு கதை எழுதலாம். கதையினால் மனிதத்தை தொட வேண்டும். அட்வைஸ் பண்ணாமல் கதாபாத்திரங்கள் மூலமாக உணர வைக்க முடியும். அதுதான் என்னுடைய குறிக்கோள். ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் அந்த சமூகத்தில் இருக்கும் சாதனையாளர்கள், அறிஞர்கள், சுய உணர்வு இருப்பவர்கள் நல்லறிவைப் பரப்ப வேண்டும். எனக்கு அப்படி ஒரு கனவு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த சுய உணர்வு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நாம் எந்த நாட்டுக்குப் போனாலும் நம்மிடம் அந்தப் பெருமிதம் இருக்க வேண்டும். அனைவருக்கும் சமமாக நிற்க வேண்டும். தலைகுனிந்து ஐயோ நம்மிடம் இது இல்லையே என்றெல்லாம் எண்ணக்கூடாது. கல்வி, சுய மரியாதை என அனைத்தும் நம்மிடம் சரியாக இருக்க வேண்டும். அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நம்மைச் சுற்றிப் பல வகைகளில் சுரண்டல் நடக்கிறது. பிடித்த ஹீரோக்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகளை ஃபாலோ செய்வது தவறில்லை. ஆனால், உங்களுக்கென ஒரு குடும்பம் இருப்பதை மறந்துவிடக் கூடாது. உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த காலத்தில் எல்லாம் ஒரு கிராமத்தில் பிறந்திருக்கிறீர்கள், ஒரு சாதியில் பிறந்தீர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி சிந்திக்க உனக்குத் தகுதியில்லை என்று சொல்லியே வளர்க்கப்பட்டார்கள். அப்படியான தடைகள் முதலில் உடைய வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது என நினைக்கிறேன்” என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”