உலக நாயகன் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் பார்ட்டியில் கல்யாண விருந்து வைத்திருக்கிறார். விருந்தில் என்னென்ன உணவு வகைகள் இடம்பிடித்திருந்தன என்பது பற்றிய விவரங்கள் கேட்பவர்களை திகைக்க வைத்துள்ளது.
உலக நாயகன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை தன்னுடைய 69-வது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். கமல்ஹாசனுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து மழை பொழிந்தனர். அதே நேரத்தில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் ஆகிய படங்களின் அப்டேட் வெளியான கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல், சினிமா தயாரிப்பு, பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது, அரசியலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் என எப்போதும் பிஸியாக ஓடிக் கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளுக்கு நண்பர்கள், திரையுலக பிரபலங்களுக்கு தனி பார்ட்டியையும், பத்திரிகை நண்பர்களுக்கு சிறப்பு பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
உலகநாயகன் கொடுத்த பிறந்த நாள் பார்ட்டியில் பரிமாறப்பட்ட விருந்து கல்யாண விருந்தை தாண்டி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் பிறந்த நாள் பார்ட்டியில் பரிமாறப்பட்ட உணவுகளை, ஸ்டார் குக் லிஸ்டில் உள்ள மதப்பட்டி ரங்கராஜன் தான் செய்திருந்தார். கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து, இவர் வெளியிட்டுள்ள மெனுவைப் பார்த்து பலரும் அசந்து போயிருக்கிறார்கள்.
கமல்ஹாசன் பிறந்தநாள் விழா பார்ட்டியில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் என்னென்ன பார்க்கலாம்: “நூல் பரோட்டா, நீலகிரி சிக்கன் கிரேவி, நீலகிரி மஸ்ரூம் கிரேவி, கொங்கு ஸ்பெஷல் ஃபயர் வுட் மட்டன் தம் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி, ரைத்தா, பொன்னி அரிசி சாதம், மட்டன் சிறுவாணி தண்ணி குழம்பு, மதுரை அயிரை மீன் குழம்பு, எலும்பு ரசம், பெப்பர் ரசம், குல்கந்து தயிர்,சிக்கன் ரேஷ்மி டிக்கா, மதுரை மட்டன் கோலா உருண்டை, நல்லம்பட்டி நாட்டுக்கோழி வறுவல், தென்னங்குருத்து பொரியல், மினி பரோட்டா பெப்பர் சாப்ஸ், பிச்சு போட்ட கோழி வறுவல், வெஜ் கோலா உருண்டை, வைலட் கேபேஜ் தோரான், நாகர்கோவில் அவியல், கேரளா அட பிரதாமன் பாயசம், அப்பளம் ஊறுகாய்” ஆகியவை இடம்பெற்றிருந்தன. டெசர்ட் ஐட்டத்தில், மதுரை ஜிகர்தண்டா மற்றும் விருப்பாச்சி வாழைப்பழம் ஐஸ் பீடா ஆகியவை இடம்பெற்றிருந்தது.
கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டி விருந்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம் தயவு செய்து உணவை வீணாக்க வேண்டாம், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்கிற அன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. கல்யாண விருந்தைத் தாண்டிய இந்த விருந்தில், உலக நாயகன் கமல்ஹாசனும் கலந்து கொண்டு, பத்திரிகையாளர்களுடன் சாப்பிட்டு அவர்களை மகிழ்வித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.