Coronavirus : கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் உருவாகிய இந்த வைரஸ் தாக்குதல், படிப்படியாக இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளை தாக்கியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் 1000-ஐ தாண்டி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் இப்போது வரை 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமூக பரவலை தடுக்க நாடு முழுவதும் 144 சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள், வெளியில் வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்களும் பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான, கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கவிதை கீழே வருமாறு...
”வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்?
ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்?
ரோகம் கற்பிக்காததை மோகமா கற்பிக்கும்?
தாகம் கற்பிக்காததை தடாகமா கற்பிக்கும்?
வாழ்...
ஏழ்மை இழிவன்று
அது செல்வத்தின் முதல் படி
தாகத்துடன் நட, தடாகம் தென்படும்
மோகமும், சாவதும், இறைவனும் இன்றியமையாததன்று
போவதும் வருவதும் போக்குவரத்தன்றி
வேறென்ன சொல்லு தோழா! தோழி!”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”