மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு காலில் இன்று காலை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்றும் அவர் நலமுடன் உள்ளதாக அவருடைய மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் அறிவித்துள்ளனர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், தமிழக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளதால் ஒரு பக்கம் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அதே நேரத்தில், மற்றொரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 17ம் தேதி நிறைவடைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு நாளில் தனது சில ஆண்டுகளுக்கு முன்பு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு குறித்தும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை குறித்தும் பேசினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த மறுநாளே கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தால் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளடஹல் சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். அதனால், மக்களை நேரில் சந்திக்க இயலாது என்றாலும் அந்த மனக்குறையைத் தொழில்நுட்பத்தின் வழியாக போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோசு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான இடையூறின்றி நிகழும். என் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும் இப்போதும் இது தொடரும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கமல்ஹாசன் அறுவை சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கமல்ஹாசன் அவரது வலது கால் எலும்பில் லேசான தொற்று ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முழங்கால் எலும்பில் ஏற்பட்ட தொற்றை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டது. அவர் நலமாக இருக்கிறார். நன்றாக குணமடைந்துவருகிறார்” என்று அறிவித்தது.
அதே நேரத்தில் கமல்ஹாசனின் மகள்களும் நடிகைகளுமான ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் அவர்களுடைய தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இன்று காலையி ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என்.மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.
அப்பாவை மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார்.
அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"