இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியன் 2 படத்தைக் காண ரசிகர்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சி திரையிடப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கான அதிகாலை சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், இந்தியன் 2 திரைப்படத்தை திரையரங்குகளில் கூடுதல் காட்சி திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் உலகநாயகன் கமல்ஹாசனும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியன் 2 திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இந்தியன் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இந்தியன் 2 உருவானது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்தியன் 3 வெளியாக உள்ளதாக படத்துக்கான புரோமோஷனில் கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்தார்.
சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், முதல் நாள், முதல் காட்சி காண வேண்டும் என ஆவலில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில், இந்தியன் 2 திரைப்படத்தைக் காண ரசிகர்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சி திரையிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், தமிழக அரசு, இந்தியன் 2 திரைப்படத்திற்கு ரசிகர்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சி திரையிட அனுமதி அளிக்கவில்லை. மாறாக, கூடுதல் காட்சி திரையிட அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், திரையரங்குகளில், முதல் மூன்று நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது.
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய 2 படங்கள் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒரே நேரத்தில் வெளியானது. இந்த படங்களுக்கு தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. அப்போது, ரசிகர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக மோசமான சம்பவங்கள் நடந்தது. அதனால், நட்சத்திர நடிகர்கள் நடித்த திரைப்படங்களின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“