36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைஃப்'. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் தக் லைஃப் படம் வருகிற 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, 'தக் லைஃப்' படம் புரோமோஷன் விழாவில், 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' எனக் கமல் குறிப்பிட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கமலுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தற்போது 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை விதித்து இருப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எம். நரசிம்மலு பேசுகையில், "கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தக் லைஃப் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது. அது நிச்சயம் நடக்காது. இது தொழில்துறையைப் பற்றியது அல்ல, இது மாநிலத்தைப் பற்றியது. அரசியல் கட்சிகள் கூட எதிர்க்கின்றன, கன்னட ஆதரவு அமைப்புகள் அவர் பதிலளிக்க வேண்டும் என்று தெளிவாக உள்ளன. அவர் மன்னிப்பு கேட்காமல் படத்தை வெளியிடுவது கடினம். எங்கள் காட்சியாளர்களோ அல்லது விநியோகஸ்தரோ அதைத் திரையிடத் தயாராக இல்லை. இங்கே எப்படி படத்தை வெளியிட முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு ஆதரவு அளிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு சட்டரீதியாக ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு தருவதாகவும், கன்னட மொழிப் பிரச்சனையில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு என்றும், அது பற்றி கமலுக்கு தெரியாது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
இதேபோல், கர்நாடக பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "ஒருவர் தங்கள் தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவத்தை வெளிப்படுத்துவது கலாச்சார திவால்நிலையின் அடையாளமாகும். குறிப்பாக கலைஞர்களுக்கு, ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருப்பது அவசியம். கன்னடம் உட்பட பல மொழிப் படங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளார், ஆனால் அவரது கருத்து 'அப்பட்டமான ஆணவத்தை' காட்டுகிறது," என்று அவர் கூறியுள்ளார்.
மனு தாக்கல்
இந்த நிலையில், 'தக் லைஃப்' திரைப்படம் எந்த வித இடையூறும் இன்றி வெளியாக கோரி நடிகர் கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தக் லைஃப் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும், திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் நகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்த வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் திட்டம் எதுவும் இல்லை என்று நடிகர் கமல் தெளிவுபடுத்தியுள்ளார். "இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது. நான் ஏற்கனவே மிரட்டப்பட்டிருக்கிறேன், நான் தவறு செய்து இருந்தால், மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்," என்று அவர் கூறியுள்ளார்.