கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைப் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், சில மணி நேரங்களில் படம் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு, கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தக் லைப். 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணியில் தயாராகியுள்ள இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ச், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை, கமல்ஹாசன், மணிரத்னம், ஆகியோருடன் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது,
கடந்த சில வாரங்களாக தக் லைப் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை வரவேற்கும் விதமாக கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கூறியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தக் லைப் படத்தின் போஸ்டர்கள் கிழிப்பு, கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பு என கன்னட அமைப்பினர் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதேபோல் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கமல்ஹாசன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கும்வரை படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறியது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றமும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்த கமல்ஹாசன், கர்நாடகாவில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தார். இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஜூன் 12-ந் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே கர்நாடகம் தவிர்த்து உலகம் முழுவதும் தக் லைப் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வரும் நிலையில், சிம்புவும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களில் தக் லைப் படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படத்தை இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையிலும் தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.