Advertisment
Presenting Partner
Desktop GIF

"உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம்": கமல்ஹாசன் திடீர் அறிக்கை

இனி தன்னை உலகநாயகன் போன்ற பட்டங்களைக் கொண்டு அழைக்க வேண்டாமென நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan Kalathur

இனி தன்னை உலகநாயகன் உள்ளிட்ட பட்டங்களைக் கொண்டு அழைக்க வேண்டாமெனவும், தனது பெயரைப் பயன்படுத்தினாலே போதுமானது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன். உங்களின் இந்த பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.

சினிமாக் கலை, எந்தவொரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக் கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிறக் கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலும் ஆனது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.

அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டதுபோன்ற பட்டங்களையும், அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக்குறைவும் வந்துவிடாத வண்ணம், அவற்றைத் துறப்பது என்பதே அது.

எனவே என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும், ஊடக நண்பர்களும், திரைத்துறையச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்ய கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக் கொள்கிறேன். 

இத்தனை காலமாக நீங்கள் என்மேல் காட்டிவரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்தில் இருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Makkal Needhi Maiam Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment