இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தனது அரசியல் கருத்துக்களை பேசி வரும் நிலையில், படப்பிடிப்புக்காக அவருக்கென தனியாக வழங்கப்பட்ட ஹலிகாப்டருடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் ரூ 400 கோடிக்கு மேல் வசூலித்து கமலின் மார்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த படம் கொடுத்த வெற்றியின் காரணமாக கமல்ஹாசன் அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
அந்த வகையில் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை பேசி வரும் கமல்ஹாசன், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ராகுல்காந்தியின் பாரத் ஜக்டோ யாத்திரையில் பங்கேற்று பேசினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
அதே சமயம் மத்திய அரசு தொடர்பான விமர்சனங்களை தெளிவாக கூறி வரும் கமல்ஹாசன், திமுக மற்றும் காங்கிரஸுக்கு தனது ஆதரவைக் காட்டி வருகிறார். அதற்கு மேல், கமல்ஹாசனும் முன்பை விட சற்று அதிகமாகவே தனது ஆளுமையை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார். இதில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஹெலிகாப்டரின் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கமல், “ பூமியில் எனது இருப்பிடம் ஒரு சுலபமான யூகம் என்று பதிவிட்டுள்ளார். அவரது தலைப்பு ஹெலிபேடின் தரையில் காணப்படும் ஆயத்தொலைவுகளுடன் தொடர்புடையது. ஆந்திராவில் உள்ள இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் சென்றதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தளபதி 67 படத்தில் நடிக்க கமல் காஷ்மீர் வரை செல்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இப்படத்தில் ஏஜென்ட் விக்ரம் என்ற கேமியோ தோற்றத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு பயங்கரமான விபத்தில் படக்குழுவினர் மூன்று பேர் பலியாகினர், இதனால் படப்பிடிப்பு நிறுத்தியது. அதற்கு மேல் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்த நடிகர் விவேக் மரணமடைந்தார். இதனால் விவேக் நடித்த காட்சிகள் வேறு நடிகரை வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் தவிர, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் அதிரடி நாடகத்தின் தொடர்ச்சியாகும், இது ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு வயதான முதியவரின் விழிப்புணர்வு போராட்டத்தை பற்றிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“