குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. பின்னர் கதாநாயகியாக வளர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கதாநாயகன், கதாநாயகிகளுக்கு அம்மாவாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் தீவிரமான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது, தன் சிறப்பான நடிப்பால் நம்மை அழ வைத்துவிடுவார். அதே சமயம், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தால், நம் கவலைகளை மறந்து சிரிக்க வைத்துவிடுவார். ஊர்வசி ஒரு நடிப்பு அரக்கி என்று பலராலும் பாராட்டப்படுகிறார்.
1983-ல் வெளியான 'முந்தானை முடிச்சு' படத்தில் நடிகர் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமான ஊர்வசி, அதன்பின் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான கதாநாயகியாக மாறினார். சமீபத்தில் கோபிநாத் உடனான நேர்காணலில் தனது திரைப்பயணம் குறித்து பேசியிருந்தார் ஊர்வசி. தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கிய போது, நெருக்கமான காட்சிகளிலும், கவர்ச்சியான ஆடைகளிலும் நடிக்க தனக்கு தயக்கம் இருந்தது. இதுபற்றி நடிகர் கமல்ஹாசனிடம் தெரிவித்தபோது, "தமிழ் படங்களில் ஒரு பாடலிலாவது கவர்ச்சியான உடை அணிந்து நடிக்க வேண்டும். உங்களுக்கு அது சௌகரியமாக இல்லை என்றால், நீங்கள் மலையாள படங்களில் நடிக்கலாம். அங்கு அப்படி கவர்ச்சியாக நடிக்கச் சொல்ல மாட்டார்கள், அது உங்களுக்கு சௌகரியமாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு ஊர்வசி மலையாளப் படங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
#KamalHaasan sir has immense respect for talent. It was only after he appreciated my work that people in the Tamil film...
Posted by KamalHaasan Videos on Wednesday, August 6, 2025
கமல்ஹாசனின் இந்த அறிவுரை ஊர்வசிக்கு கை கொடுத்தது. மலையாளப் படங்களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த அவர், இதுவரை 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'அப்பத்தா' திரைப்படம் அவரது 700-வது படமாகும். கமல்ஹாசன் அளித்த அறிவுரையால் தான், ஊர்வசி சேச்சியின் பல சிறந்த மலையாளப் படங்களை பார்க்க முடிந்ததாக கேரள ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.