"மூன்றாம் பிறை படத்தின் பாடல் காதில் ஒலிக்கிறது”: ஸ்ரீதேவிக்கு கமல்ஹாசன் அஞ்சலி

" கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்”

இந்திய திரையுலகின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவிக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

நடிகை ஸ்ரீதேவி, தன் கணவர் போனி கபூரின் அண்ணன் மகன் திருமணத்திற்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் துபாய் சென்றார். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அப்போது, கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை போனி கபூரின் சகோதரர் சஞ்சய் கபூர் உறுதிப்படுத்தினார்.

அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், தமிழ் திரையுலகினர் என இந்திய திரையுலகமே துயரம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன், “மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்”, என பதிவிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் அவர் பதிவிட்ட இரங்கல் குறிப்பில், “பருவ வயதிலிருந்து அற்புதமான பெண்மணியாக ஆனது வரை நான் ஸ்ரீதேவியை பார்த்து வருகிறேன். அவர் எட்டிய நட்சத்திர அந்தஸ்துக்கு அவர் தகுதியானவர். அவரை கடைசியாக சந்தித்தது வரை பல மகிழ்ச்சியான தருணங்கள் அவருடன் எனக்கு உண்டு. சத்மா திரைப்படத்தின் தாலாட்டு என்னை இப்போது வருத்தமடைய செய்கிறது. நாம் அவரை இழந்துவிட்டோம்”, என குறிப்பிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close