தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் விளக்கம் அளித்துள்ளது.
தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா சமீபத்தில், கமல்ஹாசன் தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாயை இன்னும் கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரில், "கடந்த 2015- ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நான்கு ஆண்டுகள் ஆகியும், தமது படத்தில் நடிக்க கமல் முன் வரவில்லை. மேலும் தன்னிடம் வாங்கிய ரூபாய் 10 கோடியை அவர் திருப்பி தரவில்லை” எனவும் ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளார்.
திரு.ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை - ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் விளக்கம். pic.twitter.com/ju4uyk288Z
— Raaj Kamal (@RKFI) September 27, 2019
இது தொடர்பாக விளக்கம் கேட்டு, நடிகர் கமல் ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். அதற்கு, "லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் மட்டுமே பேச்சு வார்த்தை நடந்ததாகவும், படத்தில் நடித்துக் கொடுப்பதாக, ஞானவேல் ராஜாவிடம் எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை” எனவும் கமல் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
முன்னணி நடிகரான கமல் ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்த சம்பவம், தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
KamalHaasan's RaajKamal Films International Reply to Gnanavel Raja
இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இன்று(செப்.27) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஒப்பந்தத்தின் படி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உத்தம வில்லன் திரைப்படத்தின் முதல் பதிவை, திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெட்டில் ஒப்படைத்துவிட்டது.
ஞானவேல் ராஜாவுக்கும், கமல்ஹாசனுக்கும் தனிப்பட்ட வகையில் எந்தவிதமான ஒப்பந்தமும் கிடையாது. எனவே, திரைப்படத்தை வெளியிடும் பொருட்டு, கமல்ஹாசனுக்கு ஞானவேல் ராஜா பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை.
கமல்ஹாசனின் மதிப்பை கெடுப்பதற்காகவே இவ்வதந்திகள் பரப்பப்படுகின்றன. கமல்ஹாசனின் மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாராகி வருகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.