அருண்ராஜா காமராஜ், நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பராக அறியப்பட்டவர்! எனினும் அவரை சினிமா உலகின் புதிய சகலகலா வல்லவராக பலரும் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
முதலில் படங்களில் சிறுவேடங்களில் தோன்றினார். அடுத்து, ஒரு பாடலின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டார். காலா பாடலான, ‘நெருப்புடா.. நெருங்குடா.. முடியுமா?.. நடக்குமா..?’ என்கிற பாடல்தான் அது! அந்தப் பாடல் மூலமாக அடங்கி கிடந்த ரஜினியின் ஆக்க்ஷனையும், அவரது ரசிகர்களின் ஆக்க்ஷனையும் கிளப்பிவிட்டவர்!
பாடலாசிரியராக மட்டும் அல்லாமல், பாடகராகவும் பரிணாமத்தை காட்டினார். நடிகர், பாடலாசிரியர், பாடகர் அவதாரங்களுக்கு அடுத்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துவிட்டார்.
தனது நண்பரும் முன்னணி இளம் கதாநாயகருமான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தற்போது கிரிக்கெட் அணியில் சேர துடிக்கும் ஒரு பெண்ணின் கதையை கனா என்னும் தலைப்பில் இயக்கியிருக்கிறார். டிசம்பர் 21-ல் படம் வெளியாகிறது.
இதில் கதாநாயகியாக மட்டுமல்ல, கதையின் மைய நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவது ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டியுள்ளது.
தன்னுடைய திரை வாழ்க்கையில் படிப்படியாக சாதாரண ஆளாக இருந்து முன்னேறுவது ரஜினி, கமல் காலத்தோடு முடிந்துவிட்டது என்றிருந்த நேரத்தில், சிவகார்த்திகேயனோடு அருண்ராஜா காமராஜ் போன்ற இயக்குநரும் கிடைத்திருப்பது தமிழ்சினிமாவின் ஆரோக்கியநிலை திரும்புவதை காட்டுகிறது.
பாக்கியராஜ், டி ஆர் போல சகலகலா வல்லவராக அருண்ராஜா காமராஜ் உருவாகி வருவாரா?