Kanaa Tamil Movie Review: நடிகர்கள் தங்கள் மார்க்கெட்டை நிலைநிறுத்த தன்பெயரிலோ அல்லது தங்களைச் சார்ந்தவர்கள் பெயரிலோ படம் எடுப்பதுதான் சினிமா விதி. ஆனால் அவ்வப்பொழுது சில நேரங்களில் குறிஞ்சி மலர்களைபோல் சில படங்கள் வரும். அது போல தன்னுடைய சினிமா வாழ்வின் குறிஞ்சி மலராக கனாவை சிவகார்த்திகேயன் எடுத்திருக்கிறார்.
படத்தில் விவசாயம், லட்சியம் என எல்லைகள் விரிகின்றன. அதைவிட முக்கியமாக பெண்களின் தன்னம்பிக்கைக்கு எடுத்துகாட்டான, பெண் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் மாஸ்டர் பீஸ் பிலிம் பட்டியலில் வைக்கலாம்.
படத்தின் கதை: சத்யராஜின் மகள் ஐஸ்வர்யாராஜேஷ். அவரின் தந்தையைபோன்றே லட்சியக்கனவுடன் பெண்கள் கிரிக்கெட்டில் சாதிக்கவேண்டும், நாட்டிற்காக கோப்பையை வெல்லவேண்டும் என்கிற கனவோடு இலக்கை அடைய போராடும் பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் போராட்டமே கனா கதை. அதாவது கனவுகாண வேண்டும், அதை கனவோடு நிறுத்தாமல் நனவாக்க போராடும் போராட்ட குணம் ஆண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண், பெண் பாகுபாடில்லா இவ்வுலகில் அது இருபாலருக்கும் பொதுவானது என்பதை நினைவூட்டியிருக்கும் படம்.
கதாபாத்திரங்கள் என்று சொன்னால் கூட சற்று குறைவாக இருக்கும். அதற்கும் மேலாக இயல்பான மனிதர்களாகவே நினைக்கும் அளவிற்கு வாழ்ந்துள்ளார்கள் படத்தில். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவாக வரும் ரமா, தன்மகளை அடிக்கும் காட்சியாகட்டும் மற்றும் மகளின் லட்சியக்கனவை புரிந்துகொள்ளும் இடமாகட்டும், இயக்குநரின் அம்மா கதாபாத்திர தேர்வு அட்சரம் பிசகாமல் இருக்கின்றது.
சத்யராஜ் பற்றி சொல்லத் தேவையில்லை. ஜாலியான அப்பாவாக மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஏற்ற காவியத் தந்தையாகவும் நடிக்க முடியும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. வேதம் புதிது காலத்திலிருந்தே சத்யராஜ் சகலகலாராஜ்தான்.
சிவகார்த்திகேயன், படத்தின் வியாபாரத்திற்காவும் தயாரிப்பாளர் என்கிற முறையிலும் படத்திறட்கு வலு சேர்க்க வருகிறார். வழக்கமான ரஜினி ஸ்டைல் பார்முலா சிவகார்த்திகேயனை மறக்கவைத்து நெல்சன் திலீப்குமார் என்கிற தனது ஆரம்பகால ஒரிஜினல் நண்பனின் பெயரை கதாபாத்திரத்திற்கு சூட்டி கிரிக்கெட் கோச்சை கண்முன் நிறுத்துகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் இனி ஜானி ஸ்ரீதேவி, புதுமைப்பெண் ரேவதி வரிசையில் நிறுத்தப்படுவது உறுதி. முனீஸ்காந்த் உள்ளிட்டோரின் பங்களிப்பும் சிறப்பு. இசை புதிய வரவு மெட்டுகளாக இனிக்கவும் ஆடவும் ரசிக்கவும் செய்கின்றது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். எடிட்டிங் பலம் அளித்துள்ளது கனாவுக்கு.
மொத்தத்தில் கனா, சினிமா துறையில் காலம் முழுவதும் பட்டியல் படமாக இருக்கும். சினிமா ரசிகர்களின் ஆதரவு 80% பொதுமக்கள் ஆதரவு 70%.
திராவிட ஜீவா