காஞ்சனா 3 படத்தின் இந்தி ரீமேக் இயக்கும் பொறுப்பில் இருந்து ராகவா லாரன்ஸ் விலகியிருக்கிறார். பணம், புகழைவிட தன் மானம் முக்கியம் என கூறியிருக்கிறார் அவர்.
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 படம், தமிழில் வெற்றி பெற்றது. படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்தப் படத்தை ஆன் லைனில் திருட்டுத்தனமாக வெளியிட்டபோதும், அதை மீறி தியேட்டர்களில் கலெக்ஷனை குவித்தது.
இந்தப் படத்தை இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்தியில் லக்ஷ்மி பாம்ப் என்ற பெயரில் ராகவா லாரன்ஸே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அக்ஷய்குமார் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் இயக்குனரான ராகவா லாரன்ஸுக்கு தெரியாமல் அது வெளியானதாக தற்போது தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் பணம், புகழை தாண்டி, சுயமரியாதை தான் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். எனவே லக்ஷ்மி பாம் படத்தில் இருந்து நான் விலக முடிவு செய்துள்ளேன்.
இந்த முடிவை எடுத்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். எனக்கு தெரியாமலேயே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மூன்றாவது நபர் சொல்லி தான் அது எனக்கு தெரியும். மேலும் அந்த போஸ்டர் அவ்வளவு நன்றாகவும் இல்லை.
படத்தின் இயக்குனரான என்னை கேட்காமல், எனக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது எனக்கு அவமரியாதையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் எந்த இயக்குனருக்கும் ஏற்படக் கூடாது.
என்னால் இந்த படவேலைகளை அப்படியே பாதியில் நிறுத்த முடியும். ஏனென்றால் நான் எவ்வித ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனால், நான் அப்படி செய்ய மாட்டேன். ஏனென்றால் அது தொழில் தர்மம் ஆகாது.
நான் எனது பட ஸ்கிரிப்டை அப்படியே தர தயாராக இருக்கிறேன். காரணம், அக்ஷய்குமார் சார் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அவர்கள் விருப்பம் போல் வேறு இயக்குநரை வைத்து இப்படத்தை எடுத்துக் கொள்ளலாம்.
விரைவில் நேரில் சென்று அக்ஷய்குமாரை சந்தித்து இந்த ஸ்கிரிப்டை அவரிடம் ஒப்படைத்து விட்டு, நல்ல முறையில் இப்படத்தில் இருந்து நான் வெளியேறி விடுவேன். லஷ்மி பாம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியில் இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்’. இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.