Kangana Ranaut : நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து அவரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேசி வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். ஆரம்பத்தில் அவர் பேச்சுகள் உண்மையுடன் இருந்தாலும் கூட, நாட்களாக ஆக அவர் பேச்சு இது தான் என்றில்லாமல் அனைத்தையும் தொட்டு சென்றது. போதைப்பொருட்கள், வாரிசு அரசியல் என்று ஒவ்வொன்றாக பேச துவங்கினார். இறுதியில் மும்பை காவல்துறையும் அரசும் இதற்கு ஒரு வகையில் காரணம் என்றும் பேச ஆரம்பித்தார்.
மும்பை காவல்துறையால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியிருந்தார் கங்கணா. இதனை தொடர்ந்து சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத், “காவல்துறையையும், மகாராஷ்ட்ரா நிலத்தையும் நீங்கள் அவமானப்படுத்தியுள்ளீர்கள். இவ்வளவு பயம் இருந்தால் நீங்கள் மும்பைக்கே வர வேண்டாம். நீங்கள் தாராளமாக உங்களின் மாநிலத்திலேயே இருந்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “மும்பைக்கு நான் திரும்ப வர வேண்டாம் எனப் பலரும் அச்சுறுத்துவதைப் பார்க்க முடிகிறது. எனவே, வரும் வாரம், செப்டம்பர் 9-ம் தேதி அன்று நான் மும்பைக்கு வர முடிவெடுத்துள்ளேன். மும்பை விமான நிலையத்தை நான் அடையும் நேரத்தைப் பகிர்கிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள் ” என்று சவால் விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாக தற்போது மணாலியில் வசித்து வரும் கங்கணா, மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த சர்ச்சை கருத்தை தெரிவித்த பிறகு, மகாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக், கங்கனா ரனாவத் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ ப்ரதாப் சர்நாய்க் வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil