சந்திரமுகி 2 திரைப்படத்தில் தான் சிறப்பாக நடிக்க உதவியது இயக்குனரும் டான்ஸ் மாஸ்டரும் தான் என கங்கனா ரனாவத் மனம் திறந்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அடுத்த வரவிருக்கும் பெரிய திரைப்படம் 'சந்திரமுகி 2'. இந்தப் படம் விநாயகர் சதுர்த்தி வார இறுதியில் செப்டம்பர் 15 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, பி.வாசு இயக்கியுள்ள 'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா, வடிவேலு, சுபிக்ஷா, சுரேஷ் மேனன் மற்றும் ரவி மரியா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா நடிகர் அப்பாஸ்? சின்னத்திரையில் மாஸ் என்ட்ரி
இந்தப் படத்திற்கு பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' படத்தில் பத்து பாடல்கள் இடம்பெறும், இந்த ஆல்பம் ஆகஸ்ட் 24 அன்று சென்னையில் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், பேய் கதையம்சம் கொண்ட 'சந்திரமுகி 2' படத்தில் சந்திரமுகி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத், படத்தில் பணியாற்றிய அனுபவத்தை மனம் திறந்து கூறியுள்ளார். 'சந்திரமுகி 2' இயக்குனர் பி.வாசுவும் நடன இயக்குனர் கலா மாஸ்டரும் தான் எனது சிறந்த நடிப்பை வழங்க உதவினர், இயக்குனர் எனது தோற்றத்தை நன்றாக கவனித்து என்னை அழகாக காட்டியுள்ளார் என்று கங்கனா கூறியுள்ளார்.
சந்திரமுகியாக நடித்த கங்கனா ரனாவத்துக்கு அவரது உடல் மொழி மற்றும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கலா மாஸ்டர் உதவினார், இதன் மூலம் 'ஸ்வகதாஞ்சலி' பாடலில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். பாலிவுட் நடிகையான கங்கனா பான்-இந்தியா படமான 'சந்திரமுகி 2' மூலம் ரசிகர்களைக் கவர உள்ளார். மேலும் இயல்புக்கு மீறிய நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் தனது நடிப்பை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று கங்கனா நம்புகிறார். கங்கனா இந்தப் படத்தில் அரசனின் அவையில், அழகு மற்றும் நடன திறமைக்கு பெயர் பெற்ற நடனக் கலைஞராக நடித்துள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில், "கங்கனா ஒரு அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார், பெரிய திரையில் சந்திரமுகியாக கங்கனாவின் அதிர்ச்சியூட்டும் செயலைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்" என்று இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்துள்ளார்.
'சந்திரமுகி 2' ஆடியோ வெளியீட்டு விழாவில் கங்கனா ரனாவத் சந்தன நிறப் புடவையில் கருப்பு ரவிக்கையுடன் அசத்தலாகத் தோன்றினார். கங்கனா ரனாவத் தனது விருப்பமான இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி என்று புகழ்ந்துள்ளார், மேலும் கங்கனா இசையமைப்பாளருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil