பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும், பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத், இயக்குனராக அறிமுகமாகியுள்ள எமர்ஜென்சி படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் கொடுக்காத நிலையில், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் கங்கனா ரனாவத். நடிகை, தயாரிப்பாளர் என இருந்த இவர், இணை இயக்குனராக சில படங்களில் பணியாற்றிய நிலையில், தற்போது எமர்ஜென்சி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா நடித்துள்ள நிலையில், அனுபம்கெர், வைசாக் நாயர், மகிமா சௌத்ரி, ஸ்ரேயாஸ் தல்பாடி, சதீஷ் கௌசிக், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து மணிகர்னிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம், கடந்த ஜூன் 14-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு வெளியீடு தேதி மாற்றப்பட்டது.
இதனையத்து செப்டம்பர் 6-ந் தேதி (இன்று) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்திற்கு, எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மத்திய தணிக்கைத்துறை படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்துள்ளது. இதனால் எமர்ஜென்சி திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து கங்கான தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது இயக்கத்தில் தயாராகியுள்ள எமர்ஜென்சி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன், தணிக்கை குழுவின் சான்றிதழுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இது பற்றி புரிந்துகொண்டதற்கும், பொறுமையாக இருப்பதற்கும் மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் எமர்ஜென்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று விரைவில் வழக்க வேண்டும் என்று கூறி ஜன ஜாகரன சமதி தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை கங்கனா தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“