Kangana Ranaut latest news : தமிழிலில் இருந்து சென்று பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகை கங்கனா ரணாவத் பிறந்த நாள் இன்று. அவரின் பிறந்த நாள் பரிசாக அவரின் ரசிகரளுக்கும், நமக்கு கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் என்ன தெரியுமா? தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை கங்கனா ராணவாத் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்பது தான்.
ஜெயலலிதா.. இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் கம்பீரம், அழகு, ஆளுமை, கோபம், தன்னம்பிக்கை, துணிச்சல் தமிழகம் அறிந்த ஒன்று. சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஜெயலலிதா வருகைக்கு முன், பின் என தனித்தனியாக பிரிக்கலாம். அப்படி பிரித்தால் எத்தனையோ விஷயங்களை நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும்.
இப்படி ஒரு வலிமைமிக்க மிக்க பெண்ணாக, எத்தனையோ சர்ச்சைகளை சந்தித்தும் கடைசி நேரம் வரை போராடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்ற தகவல் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வெளிவந்துக் கொண்டு தான் இருக்கிறது.
முதலில் மிஷ்கினின் உதவி இயக்குநர் ப்ரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க படைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். ’தி ஐயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் ஜெ ரோலில் நித்யா மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஜெயலலிதா நினைவு நாள் அன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். ஜெயலலிதா ரோலில் நித்யா பொருத்தமாக இருக்கிறார், இருப்பார் என்றும் கமெண்டுகள் பறந்தன.
அடுத்த வாரமே, இயக்குனர் ஏ.எல் விஜய் ஜெயலலிதா பயோபிக்கை தான் எடுக்க இருப்பதாக கூறி மற்றொரு அதிர்ச்சியை அளித்தார். அந்த பரபரப்பு முடிவதற்குள் இயக்குனர் சிகரம் பாரதிராஜா
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை தான் ஏற்கனவே படமாக்க திட்டமிட்டிருப்பதாக புதிய பிரச்சனையை கிளப்பினார்.
இந்த போராட்டம் ஒருபக்கம் சென்றுக் கொண்டிருக்க, இயக்குனர் கவுதம் மேனன், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை வெப் சீரியசா எடுத்துக் கொண்டிருப்பதாக அறிவித்தார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெ ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
தெலுங்கு சினிமா பக்கம் சென்றால், அங்கையும் ஜெயலலிதா ரோலில் நித்யா மேனம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படி மாறி மாறி ஜெ. பயோ பிக் எடுப்பதில் போட்டா போட்டி நடந்துக் கொண்டிருக்க, இன்று இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அடுத்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் பாலிவுடில் மணிகர்ணிகா படத்தில் ராணி லட்சுமி பாய் வேலத்தில் நடித்து ரசிகர்களிடயே பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தலைவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வைப்ரி மீடியா சார்பில் விஷ்ணு இந்தூரி இந்த படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது இந்த படம்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இந்த படம் குறித்த அறிவிப்புகளை கங்கனா ரணாவத் பிறந்த நாளான இன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இப்படக்குழு.